Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

ADDED : ஜன 10, 2024 10:40 AM


Google News
மக்கள் பயன்பாட்டுக்கு

பாலம் திறப்பு

மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த ராஜீவ் நகர் அருகே, ஈரோடு - தொப்பூர் நெடுஞ்சாலை குறுக்கே சிறு கால்வாய் உள்ளது. அதன் குறுக்கே கட்டிய பாலம் சேதமாகிவிட்டது. இதனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1 கோடி ரூபாய் செலவில் புது பாலம் கட்டுமான பணி கடந்த ஆண்டு துவங்கியது. அப்பணி முடிந்ததால், 60 அடி நீளம் கொண்ட பாலத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் செந்தமிழ், பா.ம.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மகளிர் கைப்பந்து

இன்று தொடக்கம்

சேலம் பெரியார் பல்கலை சார்பில், தென் மண்டல பல்கலை இடையே மகளிர் கைப்பந்து போட்டி, கருப்பூரில் உள்ள பத்மவாணி கல்லுாரியில் இன்று தொடங்குகிறது. இதில், பெரியார் பல்கலை மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், 58 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு, 4 மைதானங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இரவில் விளையாடும்படி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 14ல் இறுதிப்போட்டி நடக்க உள்ளது.

எமதர்மராஜா சிலைக்குமண்டல பூஜை

ஆத்துார், கொத்தாம்பாடி பஸ் ஸ்டாப் அருகே உள்ள முனீஸ்வரன் கோவில் வளாகத்தில், கடந்த நவம்பரில், 5 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன எமதர்மராஜா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. எமதர்மராஜா எருமை வாகனத்தில் அமர்ந்தபடி பாச கயிறு இல்லாமல் கதாயுதத்துடன் உள்ளார். அங்கு நேற்று, 48வது மண்டல பூஜையையொட்டி, புஷ்ப அலங்காரத்தில் எமதர்மராஜா அருள்பாலித்தார்.

பெண் கைதிகளுக்குதையல் மிஷின் வழங்கல்

சேலம் பெண்கள் கிளை சிறையில் உள்ள கைதிகள், கைக்குட்டை, துணிப்பைகளை தயாரித்து வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள, ஜெ.எம்.ெஹச்.ஏ., தொண்டு நிறுவனம் சார்பில், இரு தையல் மிஷின்களை, இயக்குனர் குளோரி தாஸ் நேற்று, மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத்திடம்(பொ) வழங்கினார். பெண்கள் கிளை சிறை துணை சிறை அலுவலர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சபரி எக்ஸ்பிரஸ் ரயில்தாமதமாக இயக்கப்படும்

ஜோலார்பேட்டை - காட்பாடி இடையே உள்ள ஆம்பூர், பச்சப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே பொறியியல் பணி நடக்கிறது. இதனால், திருவனந்தபுரம் - செகந்திராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரயில், ஜன., 10(இன்று), 12, 15, 17, 19, 22, 24, 36, 29, 31, பிப்., 2, 5, 7, 9, 14, 16, 19 ஆகிய நாட்களில், ஒரு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படும்.

அதேபோல் நீலகிரி மலைத்தொடரில் பெய்யும் மழையால், இன்றும் நாளையும் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில், இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தார்ச்சாலை அமைக்கரூ.33 லட்சம் வழங்கிய மக்கள்

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், 1வது வார்டு பகுதியான டால்மியா போர்டு அருகே ஐ.டி., பார்க் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சில நிறுவனங்கள் செயல்படும் நிலையில், டால்மியா போர்டு பஸ் ஸ்டாப்பில் இருந்து, ஐ.டி., பார்க் வரை உள்ள மண் சாலை, தார்ச்சாலையாக மாற்ற கோரிக்கை எழுந்தது. இதனால், 99 லட்சம் ரூபாயில் 'நமக்கு நாமே' திட்டத்தில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் பங்களிப்பாக, 33 லட்சம் ரூபாய் காசோலை, மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் பாலச்சந்தரிடம் நேற்று வழங்கப்பட்டது.

திருநங்கைதீக்குளிக்க முயற்சிசேலம், செவ்வாய்ப்பேட்டை, காந்தி நகரை சேர்ந்த திருநங்கை பாவனா, 30. நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து மீட்டு விசாரித்தனர்.

அப்போது அவர் கூறியதாவது:

செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த திருநங்கை ரஞ்சனாவிடம், 2 லட்சம் ரூபாய்க்கு சீட்டுபோட்டு எடுத்து விட்டேன். அதில், 8 மாதத்துக்கு பணம் கட்ட முடியவில்லை. எல்லைப்பிடாரி என்பவரிடம் வட்டிக்கு வாங்கிய, 60,000 ரூபாயை திருப்பி தரமுடியவில்லை. அவகாசம் கேட்டதற்கு மறுத்த அவர்கள், பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். தனியே வசிக்கும் எனக்கு ஆதரவு யாரும் இல்லை. அதனால் தீக்குளிக்க வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர், அன்னதானப்பட்டி ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டு, விசாரணை நடக்கிறது.

நிலக்கடலை சாகுபடி

தொழில்நுட்ப பயிற்சி

வீரபாண்டி வட்டார வேளாண்மைத்துறையின், 'அட்மா' திட்டத்தில், ராக்கிப்பட்டியில் விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி குறித்து பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கிரிஜா தலைமை வகித்தார். அதில் ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர் பழனிசாமி, கோடை உழவின் நன்மை, நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பம், புது ரக விதைகள், விதை நேர்த்தி, திரவ உயிர் உரங்கள், நிலக்கடலை பயிர்களை தாக்கும் பூச்சிகள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள், நோய் தாக்குதல் அறிகுறி, அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், உதவி வேளாண் அலுவலர் குமார், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சதீஷ், சதீஷ்குமார், தேசிங்குராஜா ஆகியோர், மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினர்.

1,715 ரேஷன் கடைகளில்

இன்று முதல் பொங்கல் பரிசு

சேலம் மாவட்டத்தில், 1,715 ரேஷன் கடைகள் கட்டுப்பாட்டில், 10.71 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு, இன்று முதல் பொங்கல் பரிசு வினியோகிக்கப்பட உள்ளது. தலா, 1 கிலோ சர்க்கரை; பச்சரிசியுடன், முழு கரும்பு, 1,000 ரூபாய், இலவச வேட்டி, சேலை ஆகியன பொங்கல் பரிசாக நுகர்வோர் பெறலாம். அதற்கு கடந்த, 8, 9ல் ரேஷன் விற்பனையாளர், எடையாளர் வீடுதோறும் சென்று, 'டோக்கன்' வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி முதல் நாளில், 70 சதவீதம், நேற்று, 30 சதவீதம் என, முடிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பொங்கல் பரிசு வினியோகம் நடக்கிறது. இதற்கு வேட்டி, சேலை, கரும்பு ஆகியவை, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நேற்றிரவு அனுப்பப்பட்டன.

மூதாட்டியிடம்

சங்கிலி பறிப்பு

சங்ககிரி, நாகிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 65. நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு அருகே உள்ள இளைய மருமகள் பிரியதர்ஷினி, 43, வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்யும் பாப்பாத்தி, 70, என்பவரிடம் நின்று பேசிக்கொண்டிருந்தார். பைக்கில் வந்த இரு வாலிபர்கள், ஜெயலட்சுமி அணிந்திருந்த, 4 பவுன் சங்கிலியை பறித்து தப்பினர். அதேநேரம் ஜெயலட்சுமி தடுமாறி விழுந்ததில் காயம் அடைந்தார். அவர் புகார்படி சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தேங்காய் வியாபாரிவிபத்தில் பலி

இடைப்பாடி, சமுத்திரம், கஸ்பா பகுதியை சேர்ந்த, தேங்காய் வியாபாரி சரவணன், 34. இவர், 'பேஷன் புரோ' பைக்கில், நேற்று முன்தினம் சேலம் சென்றுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். இரவு, 7.00 மணிக்கு கே.ஆர் தோப்பூர் அருகே வந்தபோது, குறுக்கே வந்த சைக்கிளில் மோதினார். அதில் சரவணனும், சைக்கிளில் வந்த பொன்னுசாமி, 62, என்பவரும் காயம் அடைந்தனர். மக்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று சரவணன் உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமியை சீண்டியபட்டதாரி கைது

ஆத்துாரை சேர்ந்த பட்டதாரி அர்ஜூன், 23. இவர், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார், அர்ஜூன் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.

கொப்பரை ஏலம்வரத்து, விலை சரிவு

சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்தோறும் கொப்பரை ஏலம் நடக்கிறது. சில நாட்களாக வெயில் இல்லாமல் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் கொப்பரையை காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம், 2,022 கிலோ கொப்பரை வரத்து இருந்த நிலையில் நேற்று, 700 கிலோ மட்டும் கொண்டுவரப்பட்டது.

ஒரு கிலோ கொப்பரை, 65 முதல், 84 ரூபாய் வரை விலைபோனது. கடந்த வாரம் குறைந்தபட்சம், 72 ரூபாய் விலை கிடைத்த நிலையில், நேற்று, 7 ரூபாய் வரை விலை குறைந்தது. 700 கிலோ கொப்பரை மூலம், 54,358 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் இருந்து குதித்த வாலிபர்

சேலம், இரும்பாலை அருகே சித்தனுார் பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் செல்வகணபதி, 24. இவரது மனைவி விஜி, 20. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளார். செல்வகணபதிக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்ததால், மனைவியுடன் பிரச்னை செய்து வந்தார். இதுகுறித்து விஜி புகார்படி, சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரித்தனர். ஆனாலும் கணவரின் தொந்தரவு அதிகமாக, பிரிந்து வாழ முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனால் கலெக்டர் அலுவலகம், முதல் தளத்தில் உள்ள சமூக நலத்துறை நடத்தும் கலந்தாய்வுக்கு நேற்று மதியம், 3:00 மணிக்கு தம்பதியர் வந்தனர். அப்போதும் தடுமாறிய செல்வகணபதி, தற்கொலைக்கு முயன்று முதல் தளத்தில் இருந்து குதித்து விட்டார். சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தவறவிட்ட ரூ.2.19 லட்சம்

மீட்டுக்கொடுத்த போலீசார்

சேலம், அழகாபுரம், பெரியபுதுாரை சேர்ந்தவர் ஜேம்ஸ், 31. இவர் கடந்த, 4 காலை, மொபட்டில் செவ்வாய்ப்பேட்டைக்கு கொலுசு வாங்க சென்றார். பின், 2 ஜோடி கொலுசுடன் பையில், 2.19 லட்சம் ரூபாயுடன், மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டர். செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது, மொபட்டில் இருந்த பை தவறி விழுந்து விட்டது. அவர் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 சிறுவர்கள் பையை எடுத்துச்சென்றது தெரிந்தது. சிறுவர்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களின் பெற்றோரிடம் இருந்து பையை மீட்ட போலீசார், நேற்று ஜேம்ஸிடம் ஒப்படைத்தனர்.

சிவில் கான்ட்ராக்டர் வீட்டில்

தங்கம், வெள்ளி திருட்டு

சேலம், கன்னங்குறிச்சி, பாண்டியன் தெருவை சேர்ந்தவர் கண்ணன், 49. பி.இ., படித்த இவர், சிவில் கான்ட்ராக்டராக உள்ளார். கடந்த, 8 காலை, 9:15 மணிக்கு வெளியே சென்றவர், 10:45க்கு வீடு திரும்பினார்.

அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதன் ரகசிய அறையில் இருந்த தோடு, மூக்குத்தி உள்பட, 3 பவுன் நகை, வெள்ளி கொலுசு, அரைஞாண் கயிறு உள்பட, அரை கிலோ வெள்ளிஆபரணங்கள், 5,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

நாளை தி.மு.க., கூட்டம்

கட்சியினருக்கு அழைப்பு

தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி அறிக்கை:

தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், ஜன., 11(நாளை) மதியம், 3:00 மணிக்கு, புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள வீரபாண்டியார் அரங்கில் நடக்க உள்ளது. அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகிப்பார். இதில், சேலம் மாவட்டத்துக்கு வரும், 20ல் வர உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்தும், 21ல் நடக்க உள்ள இளைஞரணி மாநாடு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், இளைஞர் உள்ளிட்ட பல்வேறு அணியினின் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us