ADDED : ஜன 07, 2024 10:54 AM
லாரி சாய்ந்து டிரைவர் பலிகாடையாம்பட்டி
தாலுகா ஜாலிகொட்டாயை சேர்ந்தவர் அருள்குமார், 35. டிப்பர் லாரி
டிரைவர். நேற்று முன்தினம் இரவு, கொங்கரப்பட்டியில் உள்ள
சிவகுருவின் செங்கல் சூளைக்கு மண் கொட்டுவதற்கு, டிப்பர் லாரியின்
கதவை திறந்தார். அப்போது லாரி ஒருபுறமாக சாய்ந்தது. அதில்
அருள்குமார் படுகாயம் அடைந்து, ஓமலுார் அரசு மருத்துவமனையில்
முதலுதவி பெற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது
வழியில் உயிரிழந்தார். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மின் அலுவலகம் இடமாற்றம்ஆத்துார்
மின்கோட்டத்துக்கு உட்பட்ட வடக்கு உதவி பொறியாளர் அலுவலகம்,
புதுப்பேட்டை, நகராட்சி வணிக வளாக கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்த அலுவலகம், ஜன., 8(நாளை) முதல், முல்லைவாடி, எல்.ஆர்.சி., குபேர
நகர் பகுதியில் உள்ள கட்டடத்தில் செயல்படும். இத்தகவலை, ஆத்துார்
கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
வினாடி - வினா போட்டி
70 பேர் வரவில்லை
இந்திய
அஞ்சல்துறை சார்பில், 'தபால் தலை சேகரிப்பு உதவித்தொகை திட்டம்'
அறிமுகம் செய்யப்பட்டு, உதவித்தொகை பெற ஏதுவாக தபால் தலை வினாடி -
வினா போட்டி நேற்று நாடு முழுதும் நடந்தது.
முன்னதாக, 6 முதல் பிளஸ்
1 வரையான மாணவ, மாணவியரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி
சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில், 241 பேர், மேற்கில், 36 பேர்,
நாமக்கல் மாவட்டத்தில், 397 பேர் என, 674 பேர் பங்கேற்க அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது.
அவர்ளுக்கு, 8 மையங்களில் காலை, 11:00
முதல், 12:00 மணி வரை போட்டி நடந்தது. 604 பேர் பங்கேற்றனர். 70 பேர்
வரவில்லை என, அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செவித்திறன் குறைபாடு பள்ளியில்
பட்டதாரி ஆசிரியருக்கு அழைப்பு
தமிழக
அரசின் கட்டுப்பாட்டில், சேலம் சூரமங்கலம் சந்திப்பு அருகே
செவித்திறன் குறைபாடு உடையவருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
அங்கு
காலியாக உள்ள அறிவியல், வரலாறு பட்டதாரி ஆசிரியர்
பணியிடத்துக்கு, பட்டதாரி ஆசிரியருக்குரிய கல்வி
தகுதியுடையவர்கள், துணை விடுதி காப்பாளர் பணிக்கு இடைநிலை ஆசிரியர்
பயிற்சி முடித்தவர், முற்றிலும் தற்காலிக பணிக்கு
விண்ணப்பிக்கலாம்.
நியமிக்கப்படும் பட்டதாரி ஆசிரியருக்கு
அரசு நிர்ணயித்த மதிப்பூதியம், 15,000 ரூபாய், துணை விடுதி
காப்பாளருக்கு, 12,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
விருப்பம்,
தகுதியுடையவர்கள், உரிய கல்விச்சான்றிதழ்களுடன், 'தலைமை
ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி,
சீனிவாசா காலனி, உழவர் சந்தை அருகே, சூரமங்கலம், சேலம்' என்ற
முகவரிக்கு வரும், 20 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப
வேண்டும்.
10ல் பி.எப்., குறைதீர் கூட்டம்
வரும், 10ல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், பி.எப்., குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்து
சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சிவகுமார் அறிக்கை: வரும்,
10ல், ஜனவரி மாத குறைதீர் கூட்டம், சேலம் மண்டல பி.எப்., அலுவலகத்தில்
கமிஷனர் சிவகுமார் தலைமையிலும், கிருஷ்ணகிரி மாவட்ட பி.எப்.,
அலுவலகத்தில் கமிஷனர் ஹிமான்ஷூ தலைமையிலும், ஈரோடு மாவட்ட பி.எப்.,
அலுவலகத்தில் கமிஷனர் வீரேஷ் தலைமையிலும் நடக்க உள்ளது. காலை,
11:30 முதல் மதியம், 1:00 மணி வரை உறுப்பினர்கள், தொழிற்சங்க
பிரதிநிதிகள், மதியம், 3:00 முதல், 4:00 மணி வரை தொழிலதிபர்கள்,
மாலை, 4:00 முதல், 5:00 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள்
பங்கேற்கலாம்.
இதில் குறைகளை தெரிவிக்க விரும்புவோர், அதன்
விபரங்களுடன், பெயர், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு
நிதி எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றுடன், ஜன., 9க்கு
முன், மண்டல அலுவலக மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு
தெரியப்படுத்தவும். அதன்படி சேலம் மண்டல அலுவலகத்துக்கு,
ro.salem@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், கிருஷ்ணகிரி
மாவட்டத்துக்கு, do.krishnagiri@epfindia.gov.in, ஈரோடு
மாவட்டத்துக்கு, do.erode@epfindia.gov.in என்ற மின்னஞ்சல்
முகவரிகளில் பதிவு செய்யலாம்.
புளிய மரங்களை வெட்டி
அகற்றும் பணி தொடக்கம்
வீரபாண்டி
ஏரி அருகே அபாய வளைவு, பாலம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, ஆட்டையாம்பட்டி
பெரிய மாரியம்மன் கோவில் அருகே என, 3 பகுதிகளில் சாலை விரிவாக்க பணி
கடந்தாண்டு தொடங்கியது.
இதற்கு இடையூறாக இருந்த, 50க்கும்
மேற்பட்ட சாலையோர புளிய மரங்களை வெட்டி அகற்ற, கடந்த ஆகஸ்டில்
கலெக்டரின் அனுமதி பெற்று ஏலம் விடப்பட்டது. தொடர்ந்து
ஆட்டையாம்பட்டியில், 12 மரங்கள், வீரபாண்டி ஏரி அருகே, 16 மரங்கள்
வெட்டி அகற்றி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
தற்போது பாலம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சாலை இருபுறமும் உள்ள, 17 புளிய மரங்களை வெட்டி அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
மேட்டூர்,
வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்து சாம்பள்ளி அரசு
மேல்நிலைப்பள்ளியில் கெம்பிளாஸ்ட் சன்மார் ஆலை சார்பில், சமூக
பொறுப்புணர்வு திட்டத்தில், 5.50 லட்சம் ரூபாய் செலவில், 1,000 லிட்டர்
கொள்ளளவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதை,
மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் திறந்து வைத்தார்.
கெம்பிளாஸ்ட்
துணைத் தலைவர் கஜேந்திரன், ஆலை துணைத்தலைவர்கள் ஸ்ரீதர் வாசுதேவன்,
சக்கரவர்த்தி, ஸ்ரீராம்குமார், சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர்,
பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அதேபோல்
கோனுார் ஊராட்சி, சின்னகோனுார், அரசு கால்நடை மருந்தகத்துக்கு,
கெம்பிளாஸ்ட் சன்மார் ஆலை சார்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், கால்நடை
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரம் வழங்கப்பட்டது.
அதில் கால்நடை துறை இணை இயக்குனர் பாபு, துணை இயக்குனர் செல்வகுமார், மருத்துவர் அரவிந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
சிறை அலுவலர், போலீசுக்கு
உடற்பயிற்சி விழிப்புணர்வு
சேலம்
மத்திய சிறை, பெண்கள் தனி கிளை சிறையில் பணிபுரியும் அலுவலர்கள்,
போலீசாருக்கு உடற்பயிற்சி அவசியம் குறித்து விழிப்புணர்வு
நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிறை கண்காணிப்பாளர் வினோத்(பொ) தலைமை
வகித்தார். தனியார் உடற்பயிற்சி மைய பயிற்றுனர் குருமூர்த்தி,
உடற்பயிற்சியின் தேவை, விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து தினமும் தேவைப்படும் உடற்பயிற்சி, சராசரி துாக்கம், உணவு
கட்டுப்பாடு, சரிவிகித உணவு, சிறை பணிக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்தல்
குறித்து ஆலோசனை வழங்கினார். சிறை போலீசார் உள்பட, 80 பேர் பயன்
அடைந்தனர். தொடர்ந்து சிறைவாசிகளுக்கு இலவச பல் மருத்துவ முகாம்
நடந்தது. அதில், 48 பேர் பயனடைந்தனர்.
குழந்தையுடன் தாய் மாயம்
மேச்சேரி,
வெள்ளாறு அடுத்த சென்ரெட்டியூரை சேர்ந்த லாரி டிரைவர் கோகுலகண்ணன்,
25. இவரது மனைவி சுருதீஸ்வரி, 22. இவர்களுக்கு, மகள் பிரதிஷா, 3,
மட்டுமின்றி, 10 மாதமேயான ஆண் குழந்தை லக்சித் உள்ளனர்.
தம்பதி
இடையே தகராறால், 10 மாத குழந்தையுடன் கடந்த, 4ல் சுருதீஸ்வரி வீட்டில்
இருந்து வெளியேறினார். பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும்
காணாததால், நேற்று கணவர் புகார்படி மேச்சேரி போலீசார் இருவரையும்
தேடுகின்றனர்.
அதேபோல் தாரமங்கலம், தெசவிளக்கு
கொண்டக்காரனுாரை சேர்ந்த அலமேலு மகள் நிஷா, 21. இவர் மனநிலை
பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.
அவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. இதுகுறித்து அலமேலு புகார்படி தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.
மார்கழி பெருவிழா
சேலம்
சவுராஷ்டிரா வித்யா சபை கல்யாண மகால் சார்பில் பட்டைக்கோவில் அருகே
சவுராஷ்டிரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை, சிங்காரவேல்
குழுவினரின் நாதஸ்வர இசையுடன், 2ம் ஆண்டு மார்கழி பெருவிழா
தொடங்கியது.
சவுராஷ்டிரா சபை தலைவர் ஜெயகரன் தலைமை வகித்தார்.
'பட்டர்' ஜெகந்நாதன், 'ஆண்டாள் திருக்கல்யாணம்' தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து சேலம் பரமசிவம், முகுந்த் ஸ்ரீனிவாசன் ஆகியோரின், 'நாதலய
சங்கமம்' இசை கச்சேரி நடந்தது. மாநகராட்சி, 33வது வார்டு கவுன்சிலர்
ஜெய உள்பட பலர் பங்கேற்றனர்.அருணாசலேஸ்வரர் கோவிலில்
உத்திராயண புண்ணியகால கொடியேற்றம்
சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் நிகழ்வான மார்கழி மாதத்தில், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மேளதாளம் முழங்க, தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
அப்போது, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமி சன்னதி முன்புள்ள, 63 அடி உயர தங்க கொடிமரத்தில், கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் காலை, இரவு சுவாமி மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவின், 10ம் நாளில், தாமரைக்குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும்.
லேத் பட்டறையில் தீ
உரிமையாளர் சாவு
சேலம் மாவட்டம் ஓமலுார், பூமிநாயக்கன்பட்டி அடுத்த பாகல்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 56. இவர், தண்ணீர் தொட்டி பஸ் ஸ்டாப் அருகே லேத் பட்டறை வைத்திருந்தார். கடந்த, 25ல் அவர், அவரது மகன் கதிர்வேல், 27, அவர்கள் வீடு அருகே வசிக்கும் ஆனந்தன், 36, ஆகியோர், பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மதியம், 2:00 மணிக்கு பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. மூவரும் படுகாயமடைந்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்கு கோவையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு நேற்று முன்தினம் இரவு, ஆறுமுகம் இறந்து விட்டார். மற்ற இருவர், தொடர் சிகிச்சையில் உள்ளனர். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பார் உரிமையாளர்களுக்கு
அதிகாரிகள் அறிவுரை
சேலம் மாவட்டத்தில், 194 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில், 45 கடைகளில் பார் உள்ளது. மேலும், 53 கடைகளில் பார் நடத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தியூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், கடை மேற்பார்வையாளர், பார் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
அதில் உணவு பாதுகாப்புத்துறையிடம் அனுமதி(லைசென்ஸ்) பெற்று, பாரில் தின்பண்டங்கள் விற்க வேண்டும்; மாதந்தோறும், 5க்குள் பார் கட்டணத்தை செலுத்த வேண்டும். தவறினால் அபராதம் வசூலிக்கப்படும்; ஜி.எஸ்.டி., எண் பெற வேண்டும்; டாஸ்மாக் கடை நிர்வாகத்தில் தலையிட கூடாது; பாரை சுகாதாரமாக வைக்க வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஓட்டு வீட்டில் தீ விபத்து
'டிவி, பீரோ' எரிந்து நாசம்
மல்லுார், சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரங்கநாதன், 65. பழைய ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று மகனை பள்ளிக்கு அனுப்பிய பின், வீட்டை பூட்டிவிட்டு தம்பதியர் வேலைக்கு சென்றனர்.
மதியம், 12:30 மணிக்கு அவர்கள் வீடு தீப்பற்றி எரிந்தது. அக்கம், பக்கத்தினர், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், 'டிவி', பீரோ, துணிகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. காஸ் சிலிண்டர் மீட்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.2.80 கோடிக்கு
ஆடுகள் விற்பனை
கொங்கணாபுரம் சந்தைக்கு சில வாரங்களாக ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. நேற்று, கடந்த வாரத்தை விட, 400 ஆடுகள் வரை அதிகமாக விவசாயிகள் கொண்டு வந்தனர். இதனால், 4,000 ஆடுகள் கொண்டு வரப்பட்டன. 10 கிலோ ஆடு, 6,600 முதல், 6,950 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
அதேபோல் தலைவாசல் அருகே வீரகனுாரில் நடந்த சந்தைக்கு, 1,200க்கும் மேற்பட்ட ஆடுகள், 500க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு வந்தனர். இதன்மூலம், 1.20 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
ஒப்பந்த துாய்மை பணியாளர்கள்
நகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்க தலைவர் தியாகராஜன், செயலர் கோவிந்தன் ஆகியோர் நேற்று, ஆத்துார் நகராட்சி கமிஷனர் சுபாஷினியிடம் அளித்த மனு:
ஆத்துார் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர், 117 பேருக்கு அரசு அறிவித்தபடி தினமும், 610 ரூபாயை சம்பளமாக வழங்க வேண்டும். வருங்கால வைப்பு தொகை உள்ளிட்டவற்றை பிடிப்பதும் அவசியம். வார, அரசு விடுமுறை வழங்க வேண்டும். மாதந்தோறும், 1ல் ஊதியம் வழங்க வேண்டும். மேலும் முகக்கவசம், கையுறை, உபகரணங்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.
'சதம்' அடித்த மூதாட்டி இறப்பு
சேலம் மாவட்டம் மேச்சேரி, குட்டப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்டையூரை சேர்ந்த விவசாயி ராமலிங்கம். இவர், 20 ஆண்டுகளுக்கு முன், 85 வயதில் உடல்நல குறைவால் இறந்து விட்டார். இவரது மனைவி ஆண்டியம்மாள். 1924 டிச., 7ல் பிறந்த இவர், கடந்த மாதம், 100 வயது நிரம்பிய நிலையில் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது உடல், எல்லைக்குட்டையூரில் உள்ள அவர்கள் விவசாய நிலத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு, ராஜா, 75, நீலமேகம், 70, என்ற இரு மகன்கள் உள்ளனர்.
கும்பாபிேஷக நிறைவு விழா
27 சமுதாயத்தினர் கூடி வழிபாடு
கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியில் உள்ள மகா மாரியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, 2023 நவ., 19ல், செந்தாரப்பட்டியில் வசிக்கும், 27 சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்து கும்பாபிேஷக விழா நடத்தினர். நேற்று, 48ம் நாள் மண்டல பூஜையையொட்டி, 27 சமுதாயத்தினரும் ஊர்வலமாக சென்று சுவாமிக்கு அபிேஷகம் செய்து வழிபட்டனர்.
அப்போது சுவாமி புஷ்ப அலங்காரத்தில்
அருள்பாலித்தார்.
பா.ஜ.,வினர் மீது வழக்கு
பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சேலத்தில் மேற்கொண்ட நடைபயணத்தின்போது, அவரை வரவேற்று கட்சியினர் பல இடங்களில் பேனர் வைத்தனர். ஆனால் போலீஸ் அனுமதியின்றி, மக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்ததாக, அக்கட்சி நிர்வாகிகள் வினோத், தங்கராஜ், பூபாலன், விஜி, விஜயகுமார் மீது, அந்தந்த பகுதி ஸ்டேஷன் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
நிர்வாகிகள் தேர்வுசேலத்தில், ஐ.என்.டி.யு.சி., அங்கமான, 'மேக்னசைட் நேஷனல் லேபர் யுனியன்' சங்க பொதுக்குழு கூட்டம்
சமீபத்தில் நடந்தது. தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி., செயலர் தேவராஜ், புது
நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவித்தார். அதன்படி தலைவராக கார்த்திகேயன், பொதுச்செயலர் நல்லமுத்து, பொருளாளர் மகாலிங்கம், துணைத்தலைவர்கள் கணேசன், சந்திரசேகரன், மாதேஸ்வரன், துணை செயலர்கள் சரவணன், சேகர், திருமலை தேர்வு செய்யப்பட்டனர்.