ADDED : ஜன 05, 2024 10:36 AM
150 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், ஜன., 5(இன்று) முதல், 8 வரை, 150 சிறப்பு பஸ்கள் இயக்கப் படுகின்றன. சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, வேலுார் ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப் படுகின்றன.மறுமார்க்கத்திலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர், அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையங்கள், இணையதளம், செயலி வழியே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என, கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சாரல் மழையால்
ஏற்காட்டில் 'ஜில் ஜில்'
ஏற்காட்டில் கடந்த வாரம் கடும் குளிர் நிலவியது. தொடர்ந்து சில நாட்களாக ஏற்காடு முழுதும் வெயில் தென்பட்டது. இதனால் சற்று குளிர் குறைந்து இரவில் மட்டும் அதன் தாக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல், ஏற்காட்டில் சீதோஷ்ண நிலை மாறி சற்று குளிர் அதிகரித்தது. மாலை, 5:30 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஏற்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. உள்ளூர் மக்கள், வீட்டில் முடங்கினர்.
ஓட்டுச்சீட்டு முறை அமல்படுத்த
வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம் ஒருங்கிணைந்த வி.சி., சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாநகர் மாவட்ட செயலர் காஜாமைதீன் தலைமை வகித்தார். அதில், லோக்சபா தேர்தலில் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்தல்; தென்மாவட்ட பெரு மழை வெள்ள பாதிப்புகளை தீவிர பேரிடராக அறிவித்தல்; 21,000 கோடி ரூபாய் நிவாரணத்தை உடனே வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து மண்டல செயலர் இமயவர்மன் பேசினார். தெற்கு மாநகர் செயலர் மொழியரசு, கிழக்கு மாவட்ட செயலர் கருப்பையா உள்பட பலர் பங்கேற்றனர்.
கோவிலில் நகைகள் திருடிய 2 பேர் கைது
சேலம், செங்கரடு பெருமாள் மலையில், 3,000 அடி உயரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. அங்கு கடந்த, 31 நள்ளிரவு, சுவாமிக்கு அணிவித்திருந்த, 1.4 பவுனில், 4 நாமம், 1.4 பவுன், 6 குண்டுமணி, 100 கிராமில் கற்கள் பதித்த வெள்ளி நாமம், 100 கிராமில் வெள்ளி பூணுால், பெட்டியில் இருந்த, 10,000 ரூபாய், பித்தளை பொருட்கள் திருடுபோனது. அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா மாரிமுத்து, மறுநாள் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரித்தனர். அதில் வாழப்பாடி அருகே அத்தனுார்பட்டியை சேர்ந்த வெங்கடேசன், 36, சேலம், அஸ்தம்பட்டி கண்ணன், 35, திருடியது தெரிந்தது. இருவரையும், நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 1.4 பவுன் தங்கம், 125 கிராம் வெள்ளியை மீட்டுள்ளனர்.