/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மேட்டூர் கிழக்கு மேற்கு கால்வாயில் 1 மாதத்துக்கு முன் பாசன நீர் திறப்பு மேட்டூர் கிழக்கு மேற்கு கால்வாயில் 1 மாதத்துக்கு முன் பாசன நீர் திறப்பு
மேட்டூர் கிழக்கு மேற்கு கால்வாயில் 1 மாதத்துக்கு முன் பாசன நீர் திறப்பு
மேட்டூர் கிழக்கு மேற்கு கால்வாயில் 1 மாதத்துக்கு முன் பாசன நீர் திறப்பு
மேட்டூர் கிழக்கு மேற்கு கால்வாயில் 1 மாதத்துக்கு முன் பாசன நீர் திறப்பு
ADDED : ஜூலை 02, 2025 01:55 AM
மேட்டூர், மேட்டூர் கிழக்கு மேற்கு கால்வாயில், ஒரு மாதத்துக்கு முன்பாக, பாசன நீரை, அமைச்சர் ராஜேந்திரன், திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் ஆண்டுதோறும் ஆக., 1 முதல், டிச., 15 வரை, 137 நாட்கள் பாசனத்துக்கு, 9.5 டி.எம்.சி., நீர் திறக்கப்படும்.
அதன்மூலம் சேலத்தில், 16,433 ஏக்கர், ஈரோட்டில், 17,230, நாமக்கல்லில், 11,337 என, 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நடப்பாண்டு கடந்த, 29ல் அணை நிரம்பிய நிலையில் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, ஒரு மாதத்துக்கு முன்பே, நேற்று மாலை, 5:30 மணிக்கு, கால்வாயில் பாசன நீரை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பட்டனை அழுத்தி திறந்து வைத்தார். தொடர்ந்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி., செல்வகணபதி, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் உள்ளிட்டோர், கால்வாயில் வெளியேறிய நீருக்கு மலர் துாவினர்.
அமைச்சர் ராஜேந்திரன் கூறுகையில், ''முதல்வர் உத்தரவுப்படி மேட்டூர் கால்வாயில் முதல், 6 நாட்களுக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்படும். பின் படிப்படியாக அதிகரித்து திறக்கப்படும்,'' என்றார்.
14ம் முறை
கால்வாயில், 1955 முதல், பாசனத்துக்கு நீர்திறக்கப்படுகிறது. இதில் ஆக., 1க்கு முன், 14 முறை, ஆகஸ்டில், 35 முறை, தாமதமாக, 13 முறை என, 71 ஆண்டுகளில், 62 முறை பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. தவிர குடிநீர் தேவைக்கு, 3 முறை திறக்கப்பட்டது. அதேநேரம், 6 முறை நீர் திறக்கப்படவில்லை.
'பயிர்கள் நன்கு வளரும்'
முன்னதாக நீர் திறந்தது குறித்து, வலது கால்வாய் நீரை பயன்படுத்துவோர் சங்க நிதிக்குழு தலைவர் தனபால் கூறியதாவது:
மேட்டூர் கிழக்கு கால்வாய், 63.4 கி.மீ., மேற்கு கால்வாய், 43.2 கி.மீ., இதில், காவிரி கரையோர நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கால்வாய் செல்லும் பகுதிகளில் மழையின்றி வறட்சி நீடிக்கிறது.
நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டது. ஒரு மாதத்துக்கு முன் திறக்கப்பட்ட நீரால், கால்வாய் கரையோர பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதன் மூலம் பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்கள் நன்கு வளரும். அதேநேரம், 137 நாட்கள் பாசனத்துக்கு நீர் திறப்பதை, ஆக., 1ல் இருந்து அரசு கணக்கிட வேண்டும். ஜூலை, 1 முதல், 31 வரை திறக்கும் நீரை, பாசனத்துக்கு திறக்கும் நீருடன் சேர்க்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.