Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை மேட்டூர் அணையில் விரைவில் உபரி நீர் திறப்பு

11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை மேட்டூர் அணையில் விரைவில் உபரி நீர் திறப்பு

11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை மேட்டூர் அணையில் விரைவில் உபரி நீர் திறப்பு

11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை மேட்டூர் அணையில் விரைவில் உபரி நீர் திறப்பு

ADDED : ஜூன் 29, 2025 01:17 AM


Google News
மேட்டூர், மேட்டூர் அணை நிரம்பி விரைவில் உபரி நீர் திறக்க இருப்பதால், காவிரி கரையோரத்தில் உள்ள, 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று காலை வினாடிக்கு, 73,452 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 80,984 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 26,000 கனஅடி நீர் அணை மின் நிலையங்கள், 8 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது.

நேற்று மாலை அணை நீர்மட்டம், 118 அடியாகவும், நீர் இருப்பு, 90.50 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணை நிரம்ப இன்னமும், 3 டி.எம்.சி., நீர் தேவை.

இந்நிலையில், மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், நேற்று மாலை விடுத்துள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கை: மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பதால், விரைவில் அணை நிரம்பி வினாடிக்கு, 50,000 முதல், 75,000 கனஅடி நீர் காவிரியில் திறக்க வாய்ப்புள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை உள்பட, 11 மாவட்டங்களில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மேட்டூர் அணை உபரி நீர் போக்கி அருகே, மேட்டூர் நகராட்சி தங்கமாபுரிபட்டணம் பகுதியில் வசிக்கும் மக்கள், உபரி நீர் திறக்க இருப்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, மேட்டூர் ஆர்.ஐ., வெற்றிவேல், பி.என்.பட்டி, வி.ஏ.ஓ., சுதா மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

அருவிகளை மூழ்கடித்து பாயும் தண்ணீர்

கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 78,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 70,000 கன அடியானது. இதனால், அங்குள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால், காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, 3வது நாளாக தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று ஆய்வு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us