அமைதியாக முடிந்தது ஓட்டு எண்ணும் பணி
அமைதியாக முடிந்தது ஓட்டு எண்ணும் பணி
அமைதியாக முடிந்தது ஓட்டு எண்ணும் பணி
ADDED : ஜூன் 05, 2024 04:45 AM
சேலம் : சேலம் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, கருப்பூர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று காலை, 8:00 மணிக்கு தொடங்கியது. மாவட்ட தேர்தல் அதிகாரி பிருந்தாதேவி, பொது பார்வையாளர் பாட்டீல் முன்னிலையில், தபால் ஓட்டுப்பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில், 10,755 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அந்த ஓட்டுகளை எண்ணுவதற்கு அமைக்கப்பட்ட, 6 மேஜைகளுக்கு தலா, 500 ஓட்டுகள் எண்ணிக்கையில் அடுத்தடுத்து வழங்கப்பட்டன.
செல்லத்தக்க, செல்லாதவை என, தனித்தனியே பிரித்தெடுத்தபின் தகுதியான ஓட்டுகள், சின்னம் வாரியாக, 50 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டி, தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது. தொடர்ந்து, 8:30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது.
வீரபாண்டி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, இடைப்பாடி, ஓமலுார் ஆகிய சட்டசபை தொகுதிகள் முறையே தனித்தனி அறைகளில் அமைக்கப்பட்ட, 14 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இப்பணியை வேட்பாளர்களான, தி.மு.க.,வின் செல்வகணபதி, அ.தி.மு.க., விக்னேஷ், பா.ம.க., அண்ணாதுரை, நா.த.க., மனோஜ்குமார், சுயேச்சை வேட்பாளர் சிலர் பார்வையிட்டனர். முன்னதாக கட்சி முகவர்கள், வேட்பாளர்கள், காலை, 7:00 மணி முதல், ஓட்டு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கட்சிக்கு தலா, 14 முகவர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர். நுழைவாயிலில் சோதனைக்கு பின்பே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், எழுதுபொருட்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எடுத்து வரவும் அனுமதி மறுக்கப்பட்டது.
ஓட்டு எண்ணும் பணியில், 1,500 அலுவலர்கள் ஈடுபட்டனர். மாநகர், மாவட்ட போலீசார், 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஓட்டு எண்ணும் பணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.