/உள்ளூர் செய்திகள்/சேலம்/நெல் தோலை மட்டும் உரித்து விற்கும் இயற்கை விவசாயிநெல் தோலை மட்டும் உரித்து விற்கும் இயற்கை விவசாயி
நெல் தோலை மட்டும் உரித்து விற்கும் இயற்கை விவசாயி
நெல் தோலை மட்டும் உரித்து விற்கும் இயற்கை விவசாயி
நெல் தோலை மட்டும் உரித்து விற்கும் இயற்கை விவசாயி
ADDED : பிப் 06, 2024 11:17 AM
பாரம்பரிய அரிசி மீது ஏற்பட்ட ஆர்வத்தால் சினிமாவுக்கு முழுக்கு போட்டவர், தற்போது இயற்கை விவசாயியாக மாறி, பழமையான கைகுத்தல் முறைப்படி, நெல் தோலை மட்டும் உரித்து விற்பனை செய்து வருகிறார்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த குள்ளப்பநாயக்கனுாரை சேர்ந்தவர் வெங்கடேஷ் பாபு, 44. இவருக்கு சாமகுட்டப்பட்டியில், 8 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ரசாயன உரங்கள், மருந்து பயன்படுத்தாமல், 2 ஏக்கரில், 6 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார். 3 ஆண்டுகளாக பழமையான கைகுத்தல் முறைப்படி தோலை மட்டும் உரித்து விட்டு சத்து நிறைந்த அரிசி தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். சென்னையில் சினிமா உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் சேர்ந்தேன். அதன் மூலம் பாரம்பரிய நெல் திருவிழா நடக்கும் இடங்களுக்கு சென்றதில், 'நெல்' ஜெயராமன் குழுவினருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது பாரம்பரிய நெல் ரகங்கள், அதன் மருத்துவ குணங்கள், மகத்துவம் பற்றி தெரியவந்தது. பாரம்பரிய நெல் ரகங்களை, மக்களிடம் கொண்டு சேர்க்க ஆர்வம் ஏற்பட்டது. இதனால், 18 ஆண்டு சினிமா தொழிலை கைவிட்டு சொந்த கிராமத்துக்கு வந்து இயற்கை விவசாயம் செய்ய தொடங்கினேன்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, காட்டு யானம் போன்ற பாரம்பரிய நெல் விதைகளை வாங்கி வந்தேன். பல தானிய செடி, தக்க பூண்டு செடிகளை அடியுரமாக்கி, இயற்கை முறையில் சாகுபடி செய்தேன். விவசாய விளைபொருட்களை பதப்படுத்தி மதிப்பு கூட்டினால்தான் சாதிக்க முடியும் என, மத்திய அரசின் திட்டங்களும் வழிகாட்டின.
பிரதம மந்திரி குறுந்தொழில் பதன் நிறுவனங்களை உருவாக்குதல் திட்டத்தில், 12 லட்சம் மானிய கடன் பெற்றேன். அதில் பழமையான கைகுத்தல் முறையில் நெல்லின் தோலை மட்டும் உரிக்கும் இயந்திரத்தை, சோலார் பேனலுடன் வாங்கினேன். சோலார் மூலம் இயந்திரத்தை இயக்கி நெல் தோலை மட்டும் உரித்து எடுக்கிறேன். அரிசியை இருப்பு வைப்பதில்லை. மக்கள் கேட்டபின் தோலை உரித்து புதிதாக தருகிறோம்.
கருப்பு கவுனி அரிசிக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு கொழுப்பை கட்டுக்குள் வைக்கும் சக்தி உள்ளது. மக்கள் தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசி உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கத்துக்கு மாறி வருகின்றனர். உள்ளூர் முதல், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் மக்கள் வாங்கிச்செல்கின்றனர். வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் கூட, இங்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் மூலம் அரிசியை வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ கருப்பு கவுனி, 150 ரூபாய், மாப்பிள்ளை சம்பா, 80 ரூபாய், காட்டு யானம், 90 ரூபாய்க்கு விற்கிறோம்.
பாரம்பரிய நெல் ரகங்களை தோல் உரிக்கவும் வருகின்றனர். ஒரு கிலோ தோல் உரிக்க, 8 ரூபாய். அரிசி விற்பனை, தோல் உரித்தல் மூலம் மாதம், 70,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இது மன நிறைவை தருகிறது. பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை, விவசாய பணியில் ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு தேவை!
டிபார்ட்மென்ட் ஸ்டோர், கடைகளில் பாரம்பரிய அரிசியை பாக்கெட்டில் அடைத்து, 6 மாதங்களுக்கு மேல் வைத்து விற்கின்றனர். அரிசியை வண்டு, பூச்சி தாக்காமல் இருக்க ரசாயன மருந்து பயன்படுத்துகின்றனர். தவிர கருங்குறுவை அரிசி கறுப்பாக இருக்கும். அது கிலோ, 90 ரூபாய். அதன் மருத்துவ குணம் வேறு. ஆனால் கருங்குறுவை அரிசியை கருப்பு கவுனி எனக்கூறி, கிலோ, 150 ரூபாய்க்கு விற்கின்றனர். அதேபோல் குள்ளக்கார் அரிசி சிவப்பாக இருக்கும். அதை, மாப்பிள்ளை சம்பா என விற்கின்றனர். சாயம் கட்டிய போலி அரிசிகளும் உள்ளன. அதனால் பாரம்பரிய அரிசியை வாங்கும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.