Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஜனாதிபதியிடம் விருது பெற்ற 100 வயது முதியவர் மரணம்

ஜனாதிபதியிடம் விருது பெற்ற 100 வயது முதியவர் மரணம்

ஜனாதிபதியிடம் விருது பெற்ற 100 வயது முதியவர் மரணம்

ஜனாதிபதியிடம் விருது பெற்ற 100 வயது முதியவர் மரணம்

ADDED : ஜன 03, 2024 11:24 AM


Google News
மேட்டூர்: ஜனாதிபதியிடம் உழைப்பால் உயர்ந்தவர் விருது பெற்ற, 100 வயது முதியவர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், கோனுார் ஊராட்சி, கூழையூரை சேர்ந்தவர் முதியவர் துரைசாமி, 100. இவரது மகன்கள் அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன், 75, நாகராஜ், 65, மகாதேவன், 56, மகள் மல்லிகேஸ்வரி, 55. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த துரைசாமி, 1960 முதல் மேட்டூர் கெமிக்கல்ஸ் தனியார் ஆலையில் வேலை செய்தார்.

அப்போது, ஆலையில் உற்பத்தி செய்யப்படும் காஸ்டிக் சோடா, கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. காஸ்டிக் சோடா, 100 கிலோ கொள்ளளவு கொண்ட பேரலில் அடைக்கும் போது, வெப்பத்தால் ஓரிரு நாட்களில் ஆவியாகி, 50 கிலோ வரை எடை குறைந்து விடும். இதனால் ஆலை நிர்வாகத்துக்கும், ஏற்றுமதி செய்வோருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதையறிந்த துரைசாமி ஆராய்ச்சி செய்து, காஸ்டிக் சோடா ஆவியாவதை தடுத்தார். இதன் மூலம் வருவாய் இழப்பு தடுக்கப்பட்டது.

அதற்காக துரைசாமியை ஆலை நிர்வாகம் பாராட்டியது. மேலும், 1966 மார்ச் 29ல் அப்போதைய இந்திய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், 'உழைப்பால் உயர்ந்தவர்' விருது வழங்கி துரைசாமியை பாராட்டினார். பின் ஆலையில் இருந்து ஓய்வு பெற்ற அவர், கூழையூரில் கருப்பு வெற்றிலை சாகுபடி செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதித்த துரைசாமி, தன் மகன் விஸ்வநாதன் வீட்டில் தங்கியிருந்தார்.

அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில்குமார், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை துரைசாமி உடல், கூழையூரில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us