/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி; அதிவேகத்தால் உயிர்களை பறித்த விபத்து குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி; அதிவேகத்தால் உயிர்களை பறித்த விபத்து
குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி; அதிவேகத்தால் உயிர்களை பறித்த விபத்து
குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி; அதிவேகத்தால் உயிர்களை பறித்த விபத்து
குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி; அதிவேகத்தால் உயிர்களை பறித்த விபத்து
ADDED : ஜூன் 13, 2024 07:48 AM

சேலம் : சேலம் அருகே தனியார் பஸ்சை அதிவேகமாக ஓட்டிவந்து பைக்குகள் மீது மோதியதில் இரு குழந்தைகள் உள்பட, 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து சேலம் நோக்கி லாரி, நேற்று காலை, 10:45 மணிக்கு வந்து கொண்டிருந்தது. சேலம் அருகே வீராணம், சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில், சேலம் - திருப்பத்துார் நெடுஞ்சாலையில் வந்தபோது வேகத்தடை இருந்ததால், லாரி டிரைவர், 'பிரேக்' போட்டு மெதுவாக ஓட்டினார்.
அப்போது லாரிக்கு பின்புறம், 'யுனிகான்' பைக்கில், தர்மபுரி மாவட்டம் அரூர், எம்.தாதம்பட்டியை சேர்ந்த முருகன், 30, அவரது மனைவி நந்தினி, 25, அவர்களது குழந்தை கவின், 1, வந்தனர். முருகன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவையராக பணிபுரிந்தார்.
அதேபோல, 'பல்சர்' பைக்கில், சேலம், வீராணம் அருகே பூவனுார், போயர் தெருவை சேர்ந்த லட்சுமணன், 31, அவரது மனைவி வேதவள்ளி, 28, மகன்கள் சின்னதுரை, 6, திலீப், 4, உறவினரின், 11 மாத குழந்தை ரித்திகா வந்தனர். லட்சுமணன் தம்பதி, கோவையில் கட்டட பணி செய்து வந்தனர்.
இரு பைக்குகளை ஓட்டி வந்தவர்களும், வேகத்தடையில் மெதுவாக செல்ல நிறுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கு பின்னால், ஆச்சாங்குட்டப்பட்டி - சேலம் இடையே செல்லும், 'சண்முகா' எனும் தனியார் டவுன் பஸ், மின்னல் வேகத்தில் வந்து, இரு பைக்குகள் மீதும் மோதியது. அப்போது பஸ்சில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.
ஆனால், தம்பதியர் முருகன், நந்தினி மற்றும் வேதவள்ளி ஆகியோர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த நந்தினி, தனியார் பஸ் முன்பகுதியில் சிக்கி தொங்கிக்கொண்டிருந்த காட்சி, அங்கிருந்தவர்களை பதைபதைக்க செய்தது. மேலும் அங்கு வந்த வேதவள்ளியின் குடும்பத்தினர், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் இறந்த தம்பதியின் குழந்தையான கவினும், மற்றொரு குழந்தை ரித்திகாவும் உயிரிழந்தனர். வீராணம் போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயம் அடைந்தவர்களை, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.
காயம் அடைந்த லட்சுமணன், அவரது குழந்தைகள் சின்னதுரை, திலீப்புக்கு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், பஸ்சில் வந்து லேசாக காயம் அடைந்த 3 - 54 வயதுடைய ஒன்பதும் பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி நெரிசலை சரிசெய்தனர்.
கோர விபத்துக்கு காரணமான, தனியார் பஸ் டிரைவரான, சுக்கம்பட்டியை சேர்ந்த ரமேஷ், 28, நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.