ADDED : பிப் 25, 2024 03:35 AM
சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க.,வின் சேலம் மாநகர மாவட்டம் சார்பில் நேற்று, ராஜகணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு, மாநர மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமையில் கட்சியினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சேலம் தெற்கு எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், பகுதி செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாநகராட்சியின், 60 வார்டுகளிலும் கிளை நிர்வாகிகள் சார்பில், ஜெயலலிதா படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நலத்திட்ட உதவிகள், அன்னதானமும் பல இடங்களில் வழங்கப்பட்டன.
அதேபோல் சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், ஆத்துாரில் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் கட்சியினர், 76 கிலோ 'கேக்' வெட்டி கட்சியினர், மக்களுக்கு வழங்கி கொண்டாடினர். இதில், எம்.எல்.ஏ.,க்களான ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஆத்துார் நகர செயலர் மோகன், தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலர்கள் ரஞ்சித்குமார், சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆத்துார், நரசிங்கபுரம், செல்லியம்பாளையம் பகுதிகளில் கோலப்போட்டி நடத்தி, வெற்றி பெற்ற பெண்கள், 500 பேருக்கு சேலைகளை, மாவட்ட செயலர் இளங்கோவன் வழங்கினார். ஆத்துார், கெங்கவல்லி தொகுதிகளில், 2,000 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்காட்டில் ஒன்றிய செயலர் அண்ணாதுரை தலைமையில், ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா, ஜெயலலிதா படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல் தாரமங்கலத்தில் நகர செயலர் பாலசுப்ரமணியம், அயோத்தியாப்பட்டணத்தில் ஒன்றிய செயலர் ராஜசேகரன், பனமரத்துப்பட்டியில் கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன், மல்லுாரில் மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன், அம்மாபாளையத்தில், சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி செயலர் தமிழ்மணி தலைமையில் அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடினர்.