Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம் ரவுடி கொலை சம்பவத்தில் ஈரோடு கோர்ட்டில் இருவர் சரண்

சேலம் ரவுடி கொலை சம்பவத்தில் ஈரோடு கோர்ட்டில் இருவர் சரண்

சேலம் ரவுடி கொலை சம்பவத்தில் ஈரோடு கோர்ட்டில் இருவர் சரண்

சேலம் ரவுடி கொலை சம்பவத்தில் ஈரோடு கோர்ட்டில் இருவர் சரண்

ADDED : மார் 21, 2025 01:44 AM


Google News
சேலம் ரவுடி கொலை சம்பவத்தில் ஈரோடு கோர்ட்டில் இருவர் சரண்

ஈரோடு:சேலம் ரவுடி கொலை வழக்கில், சேலத்தை சேர்ந்த இருவர், ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சேலம், கிச்சிப்பாளையம், சுந்தர் வீதியை சேர்ந்தவர் ஜான், 30; திருப்பூரில் வாகனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தினார். போதை பொருள் வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வந்தவர், சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டு வந்தார். வழக்கம்போல் கையெழுத்து போட்டுவிட்டு, காரில் திருப்பூருக்கு மனைவியுடன் நேற்று முன்தினம் சென்றார். ஈரோடு மாவட்டம் நசியனுார் அருகே கார்களில் வந்த கும்பல் வழிமறித்து, சரமாரியாக வெட்டி கொன்றது. சித்தோடு போலீசார், சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோரை கால்களில் சுட்டும், கார்த்திகேயனை காயத்துடனும் பிடித்தனர். கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக நால்வரும் சேர்க்கப்பட்டனர். நால்வரிடமும் போலீசார் விடியவிடிய விசாரணை நடத்தியதில், கொலையில் மேலும் ஆறு பேர் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: கூட்டாளியாக இருந்த செல்லதுரையுடன் இணைந்து, பல்வேறு கொலை, அடிதடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஜான் ஈடுபட்ட நிலையில், விரோதத்தால் பிரிந்துள்ளார். கடந்த, 2020 டிச.,ல் செல்லதுரையை, வெளியூர் ரவுடிகளை வரவழைத்து ஜான் வெட்டி கொலை செய்துள்ளார். இதற்கு பழிதீர்க்கும் வகையில் ஜான் கொல்லப்பட்டுள்ளார். பிடிபட்டுள்ள கொலை கும்பலை சேர்ந்தவர்கள் மீதும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாகவும் உள்ளனர். இவ்வாறு கூறினர்.

இருவர் சரண்இந்நிலையில் கொலை தொடர்பாக, சேலம், கிச்சிப்பாளையம், கஸ்துாரிபா தெருவை சேர்ந்த புருஷோத்தமன் மகன் ஜீவகன், 35; கிச்சிபாளையம், சுந்தர் தெரு காதர் ஷெரீப் மகன் சலீம், 33; ஆகியோர், ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-3ல், மாஜிஸ்திரேட் அப்சல் பாத்திமா முன் நேற்று சரணடைந்தனர். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி இருவரும் ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஜீவகன், படுகொலை செய்யப்பட்ட செல்லதுரையின் தம்பி. மற்றொருவரான சலீம், தமிழக வாழ்வுரிமை கட்சியில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின், ஜான் உடல் நேற்று கிச்சிப்பாளையம் கொண்டுவரப்பட்டு, சடங்குகள் செய்யப்பட்டன. அங்கு, 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜான் உடல், நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே சாணார்பாளையத்தில் உள்ள, அவரது பெற்றோர் வீட்டுக்கு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு, சேலம் வந்த சித்தோடு போலீசார், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த வக்கீல் பெரியசாமி, பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், சிவகுமார் ஆகியோரை பிடித்துச்சென்று விசாரிக்கின்றனர்.

கோர்ட்டில் பலத்த பாதுகாப்புஇந்நிலையில் செல்லதுரை கொலை வழக்கு, சேலம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட, 32 பேரில் ஒருவர் மட்டும் ஆஜரானார். மற்றவர்கள் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. பழிவாங்கும் சம்பவம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us