/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ பா.ம.க., வக்கீல் சுட்டுக்கொலை குற்றவாளி காலில் சுட்டுப்பிடிப்பு பா.ம.க., வக்கீல் சுட்டுக்கொலை குற்றவாளி காலில் சுட்டுப்பிடிப்பு
பா.ம.க., வக்கீல் சுட்டுக்கொலை குற்றவாளி காலில் சுட்டுப்பிடிப்பு
பா.ம.க., வக்கீல் சுட்டுக்கொலை குற்றவாளி காலில் சுட்டுப்பிடிப்பு
பா.ம.க., வக்கீல் சுட்டுக்கொலை குற்றவாளி காலில் சுட்டுப்பிடிப்பு
ADDED : ஜூன் 15, 2025 01:52 AM
சோளிங்க:சோளிங்கர் அருகே பா.ம.க., வக்கீலை சுட்டுக்கொன்றவர்களை பிடிக்க சென்ற போலீசாரை தாக்கியதால், போலீசார் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 51. இவர், சரித்திரபதிவேடு குற்றவாளி. மார்ச் 8ம் தேதி காலை அவரது விவசாய நிலத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்றபோது, வெட்டி கொலை செய்யப்பட்டார். சோளிங்கர் போலீசார் விசாரித்து, வேலம் கிராமத்தை சேர்ந்த பிரபா என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவர் சிறையிலிருந்து ஜாமினிலிருந்து வெளி வருவதற்கான வழக்கில், வக்கீலும், வேலுார் மாவட்ட பா.ம.க., இளைஞரணி தலைவருமான சோளிங்கரை சேர்ந்த சக்கரவர்த்தி ஆஜரானார்.
இதில், ஆத்திரமடைந்த சீனிவாசன் மகன் பிரபு, 28, சக்கரவர்த்தியை கள்ளத்துப்பாக்கியால் ஜூன் 13ம் தேதி இரவு சுட்டுக் கொலை செய்தார்.
ஆரம்பத்தில், சக்கரவர்த்தி சாலை விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. அதற்கேற்ப, வேகத்தடையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து, தலையில் காயமடைந்து இறந்ததை போல சிசிடிவி காட்சிகளை பார்த்து போலீசார் விபத்து என, முடிவுக்கு வந்தனர்.
ஆனால், அந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் இருவர் அவரை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. தொடர் விசாரணையில், பிரபு, அவர் நண்பருடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு சக்கரவர்த்தியை கொலை செய்தது தெரியவந்தது.
அவரை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில், ராணிப்பேட்டை, சிப்காட் பெல் தொழிற்சாலை அருகே பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று மதியம் பிரபுவை போலீசார் பிடிக்க முயன்ற போது, அவர் போலீசாரை தாக்கினார். போலீசார் அவரை துப்பாக்கியால் முழங்காலில் சுட்டு கைது செய்தனர். அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மற்றொருவர் தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: சக்கரவர்த்தி படுகொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கான சதித்திட்டத்தை ஒரே நாளில் தீட்டி நிறைவேற்றியிருக்க முடியாது.
இந்த சதித்திட்டத்தை கண்டறிந்து முறியடிக்க காவல்துறை தவறியது ஏன்? தமிழக காவல்துறையின் உளவுத் துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதா? அல்லது கொலையாளிகளுக்கு துணை போனதா?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய, துப்பாக்கி கலாச்சாத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசு, தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்துவிட்டது.