ADDED : செப் 04, 2025 04:07 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே மொத்திவலசையில் முத்து மாரியம்மன் கோயில் முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
நாள்தோறும் இரவில் ஆண்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு மூலவர் முத்து மாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இரவில் முளைப்பாரி ஏந்தியவாறு சக்தி கரகம் செல்ல ஊர்வலம் நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு கோயில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 5:00 மணிக்கு முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக சென்று சின்ன ஊருணியில் பாரி கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை மொத்தி வலசை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
தேவிபட்டினம்: தேவி பட்டினம் அருகே பாப்பனேந்தல் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா நடைபெற்றது.
முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து சென்ற பக்தர்கள் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு அபிஷேக அலங் காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு இரவில் பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.