/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் ஜப்திராமநாதபுரம் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் ஜப்தி
ராமநாதபுரம் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் ஜப்தி
ராமநாதபுரம் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் ஜப்தி
ராமநாதபுரம் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் ஜப்தி
ADDED : ஜன 05, 2024 10:54 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அமைக்க இடம் கொடுத்தவர்களுக்கு இதுவரை உரிய இழப்பீட்டு தொகை வழங்காததால் ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு 1986ல் அலாவுதீன் மற்றும் ரைசூன்பீவி ஆகியோர் 2 ஏக்கர் 87 சென்ட் நிலம் வழங்கினர்.
அதற்கு இழப்பீட்டு தொகையாக சென்ட்க்கு ரூ.140 வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து கூடுதல் தொகை கேட்டு ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து சென்ட்க்கு ரூ.1400, ஆறுதல் தொகையாக 7.2 சதவீதம் வட்டியுடன் வழங்க நீதிமன்றம் 1989ல் தீர்ப்பளித்தது. அரசு தரப்பில் 1990 ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் சென்டுக்கு ரூ.667 மற்றும் ஆறுதல் தொகையை வட்டியுடன் வழங்க 2001 ல் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தொகையில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து 1990ல் 2 லட்சத்து 69 ஆயிரத்து 408 ரூபாயும், 1993 ல் 1 லட்சத்து 4948 ரூபாய் வழங்கப்பட்டது. ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 652 பாக்கித்தொகை வழங்கப்படவில்லை.
இதனால் 2015 ல் ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நில உரிமையாளர்கள் இருவரும் உயிரிழந்தனர். உத்தரவு நிறைவேற்றுதல் மனுவை நில உரிமையாளர்களின் வாரிசுதாரர்களான சர்புனிசாபேகம், முகமது ஹிமாயுன் ஆகியோர் தொடர்ந்து வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் மூலமாக நடத்தினர்.
2023 டிச.17 ல் வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி கதிரவன் வட்டியுடன் 1 லட்சத்து 68 ஆயிரத்து 190 ரூபாய் வழங்காததால் ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதன்படி நேற்று ஆர்.டி.ஓ., அலுவலக கம்ப்யூட்டர் உட்பட பொருட்களை நீதிமன்ற கட்டளை நிறைவேற்றுபவர் ஆனந்தராஜ் ஜப்தி செய்து சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
37 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னும் நில எடுப்பு வழக்கில் இழப்பீடு வழங்காததால் ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.