/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/குறைகளுடன் குவிந்த மக்கள்; பள்ளிக்கு கட்டடம் நோ.. பட்டா கேட்டுத் தர்ணாகுறைகளுடன் குவிந்த மக்கள்; பள்ளிக்கு கட்டடம் நோ.. பட்டா கேட்டுத் தர்ணா
குறைகளுடன் குவிந்த மக்கள்; பள்ளிக்கு கட்டடம் நோ.. பட்டா கேட்டுத் தர்ணா
குறைகளுடன் குவிந்த மக்கள்; பள்ளிக்கு கட்டடம் நோ.. பட்டா கேட்டுத் தர்ணா
குறைகளுடன் குவிந்த மக்கள்; பள்ளிக்கு கட்டடம் நோ.. பட்டா கேட்டுத் தர்ணா
ADDED : ஜன 08, 2024 11:57 PM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 2024ம் ஆண்டின் முதல் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. பள்ளிக்கு கட்டடம் வேண்டும். குடியிருக்க பட்டா, மகளிர் உரிமை தொகை என பொதுமக்கள் ஏராளமானோர் புகார், கோரிக்கை விடுத்ததால் 485 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். துணை கலெக்டர்கள் சமூக நலத்துறை மாரிச்செல்வி, ஆதிதிராவிடர் நலத்துறை கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர். முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடிநாள் நிதி அதிகம் பெற்றுத் தந்த மகளிர் திட்டத்துறை உதவி திட்ட அலுவலர் சசிகலா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முகமது ஆகியோருக்கு வெள்ளிப்பதக்கம், தலைமைச் செயலாளரின் பாராட்டுச் சான்றை கலெக்டர் வழங்கினார்.
* மாணவர்கள் அவதி: சின்ன ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் போது பூச்சிக்கடியால் சிரமப்படுகின்றனர். புதிய வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.
* பட்டா கேட்டு தர்ணா:பரமக்குடி தாலுகா மேல பார்த்திபனுார் பள்ளிவாசல் தெரு அகமது பசீர் பட்டா வழங்க கோரி குடும்பத்துடன் தர்ணா செய்தனர். மனுவில், எனது பூர்வீக சொத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மீட்டு பட்டா வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். பட்டா வழங்க கலெக்டர் உத்தரவிடவேண்டும், என கூறியிருந்தனர்.
* சிலை வைக்க கோரிக்கை: ராமநாதபுரம் அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கத்தினர் அளித்த மனுவில், ராமேஸ்வரத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதே போல பட்டா மாறுதல், உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மகளிர் உரிமைத்தொகை என பல்வேறு கோரிக்கைகளை 2024 ஆண்டின் முதல் கூட்டத்தில் மக்கள் அளித்துள்ளனர். டிச.25, ஜன.1 திங்கட்கிழமை அரசு விடுமுறையால் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் நேற்று 2024ம் ஆண்டின் முதல் கூட்டத்தில் 485 மனுக்கள் பெறப்பட்டன. சர்வர் பிரச்னையால் கம்ப்யூட்டரில் பதிவு செய்யாமல் கையில் மனு பதிவு எண் எழுதி தரப்பட்டது.
இவ்வாண்டிலாவது மனுக்களுக்கு அதிகாரிகள் விரைவில் தீர்வு கண்டு இனி வரும் வாரங்களில் குறைதீர் கூட்டத்தில் மக்கள் குவிவதை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.---