ADDED : ஜூன் 11, 2025 07:14 AM

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் கடல் நீர்மட்டம் உயர்ந்து நவக்கிரகங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது.
இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்தில் நேற்று வழக்கத்தை விட கடல் நீர்மட்டம் உயர்ந்து நவக்கிரகங்கள் தண்ணீரில் மூழ்கின. நவக்கிரகங்களில் நான்கு மட்டுமே வெளியில் தெரிந்த நிலையில் இருந்தன.
இதனால் நவபாஷாணம் வந்த பக்தர்கள் அனைத்து நவகிரங்கங்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். நீர்மட்டம் உயர்வின் காரணமாக பக்தர்கள் நடைமேடை வழியாகவே நவக்கிரங்களை சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், கடலில் ஏற்படும் திடீர் மாற்றம் காரணமாக ஒரு சில நாட்களில் நீர் மட்டம் உயர்வதும் பின் இயல்பு நிலைக்கு மாறுவதும், அவ்வப்போது நடைபெறும் எதார்த்தமான நிகழ்வு தான் என்றனர்.