ADDED : ஜூன் 08, 2025 11:06 PM

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி, நாகநாதசுவாமி கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது.
மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்ஸவ விழா நடக்கிறது. மே 31ல் விழா துவங்கியது.
தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று காலை நாகநாத சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளி திருத்தேரில் அமர்ந்தார்.
இதேபோல் சவுந்தர்ய நாயகி தனி தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து விநாயகர், முருகன் வள்ளி, தெய்வானையுடன் தேரில் முன் சென்றனர்.
அப்போது நான்கு மாட வீதிகளில் திரளான பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
சிவனடியார்கள், பக்தர்கள் திருவாசகத்தை ஓதியபடி வலம் வந்தனர். தேர் நிலையை அடைந்த பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சேஷ மற்றும் காமதேனு வாகனங்களில் சுவாமி வீதி வலம் நடந்தது. இன்று காலை தீர்த்த வாரி நடக்கிறது.