/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கிராமங்களில் நோய் தாக்கி ஆடுகள் பலி அதிகரிப்பு கிராமங்களில் நோய் தாக்கி ஆடுகள் பலி அதிகரிப்பு
கிராமங்களில் நோய் தாக்கி ஆடுகள் பலி அதிகரிப்பு
கிராமங்களில் நோய் தாக்கி ஆடுகள் பலி அதிகரிப்பு
கிராமங்களில் நோய் தாக்கி ஆடுகள் பலி அதிகரிப்பு
ADDED : ஜன 05, 2024 04:37 AM
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் நோய் தாக்கி ஆடுகள் பலியாவது அதிகரிப்பதால் கிராம மக்கள் கவலையில் உள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் நாட்டுக் கோழி, கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்பு குடிசைத் தொழில் பெருகி வருகிறது. சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குளிர் காற்று வீசுகிறது. குளிர் காற்று, மழை, வெயில் மாறி வருவதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆடு, மாடுகள் மேய்ச்சல் இடங்களில் சேறும், சகதியுமாக மழை நீர் தேங்கியுள்ளது. அந்த இடத்தில் கழிவு நீர் கலந்த மழை நீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. சில நாட்களாக ஆடுகளுக்கு தொடர்ந்து வயிற்று போக்கு (கழிச்சல் நோய்) ஏற்பட்டு உணவு உண்ண முடியாமல் நடக்கவும் முடியாமல் ஒரே இடத்தில் சுருண்டு படுத்து கிடக்கின்றன.
வாய், தாடைகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. குளிர் காற்றை சுவாசிக்கும் ஆடுகளுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளது. கழிச்சல் நோய் தாக்கிய ஆடுகள் மூன்று நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் செத்து மடிகின்றன.
செக்காந்திடல் கிராமத்தை சேர்ந்த முருகன் கூறுகையில், கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் ஆடுகள் வளர்த்து வருகிறோம். திருவாடானை, தொண்டி கால்நடை மருத்துவமனை அதிக தொலைவில் இருப்பதால் ஆடுகளை கொண்டு செல்ல முடியவில்லை.
இதனால் தனியார் மருந்து கடைகளில் மருந்துகள் வாங்கி கொடுக்கிறோம். ஆனாலும் நோய் தாக்கம் அதிகமாக இருப்பதால் இக் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் இக்கிராமத்தில் முகாம்கள் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இல்லையேல் கால்நடைகள் பலி அதிகரிக்கும் என்றார்.