Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடி அழகர் கோயில் வரலாறு

பரமக்குடி அழகர் கோயில் வரலாறு

பரமக்குடி அழகர் கோயில் வரலாறு

பரமக்குடி அழகர் கோயில் வரலாறு

ADDED : மே 11, 2025 11:18 PM


Google News
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான தேவஸ்தானத்தைச் சேர்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மதுரை அழகர் கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் அனைத்து விழாக்களும் நடந்து வருகிறது.

சவுராஷ்டிர விஜயாப்தம்


பழம்பெரும் கோயில்கள், கண்ணுக்கு இனிய கடற்கரை, கோட்டை கொத்தளங்கள் கொண்ட கத்தியவார் தீப கர்ப்பத்தை சேர்ந்த சவுராஷ்டிர தேசத்தில் செல்வாக்குடன் வாழ்ந்தவர்கள் சவுராஷ்டிரர்கள்.

ஏறத்தாழ 900 ஆண்டுகளுக்கு முன்பு கஜினி முகமது படை எடுப்பால் தென் திசை நோக்கி புறப்பட்டனர்.

மராட்டிய மாநிலத்தின் 300 ஆண்டுகள் வாழ்ந்த பின் 1312ல் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் அழைப்பினை ஏற்று ஆந்திரத்தில் குடியேறினர். இதன் ஞாபகார்த்தமாக காலக்காலத்தில் சவுராஷ்டிர விஜயாப்தம் 713 என குறிப்பிடப்படுகிறது.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர், ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் உள்ளிட்டோருக்கு சவுராஷ்டிரர்களால் உற்பத்தி செய்யப்படும் பட்டாடைகள் மற்றும் வேத விற்பனர்கள், ஜோதிட, மாந்திரீக, சங்கீத, மற்போர், வைத்தியர்களின் திறமைகளும் கவர்ந்தன. இவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழகத்தில் குடியேறினர்.

பரமக்குடியில் சவுராஷ்டிரர்கள்


ராமேஸ்வரம் யாத்திரை செல்லும்போது சில குடும்பத்தினர் வைகை நதிக்கரையில் ஒரு பெண்மணி பிரசவ நிமிர்த்தமாக தங்கினர். அப்போது பரமக்குடி வைகையில் கைத்தறி நெசவு சாயத்தொழிலுக்கு உகந்ததாக இருந்ததால் தங்கினர்.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில்


500 வருடங்களுக்கு முன் கோபால பஜனை மடத்தை நிர்வகித்து தரிசனம் செய்தனர். மடத்தில் இருந்து அர்ச்சகரின் கனவில் ஒரு நாள் பகவான் தோன்றி வைகையில் தான் புதைந்து கிடப்பதாக தெரிவித்தார்.

அப்போது வழக்கம் போல் வைகை ஆற்றில் குளிக்க ஓடுகால் தோண்டும் போது சங்கு சக்கரதாரியாக ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அழகான பெருமாள் சிலை கிடைத்தது. மதுரை அழகர் கோவில் மூலவரைப் போன்று பரமசுவாமி என்ற திருநாமத்துடன் கோபால மடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பல திருப்பணிகள் நடந்த நிலையில், கி.பி. 1900 ம் ஆண்டு ராஜ கோபுரத்துடன் விளங்கும் பெருமாள் கோயிலை உருவாக்கினர். மேலும் மதுரை அழகர் கோவிலில் நடக்கும் அனைத்து விதமான விசேஷங்களும் நாள்தோறும் தவறாமல் நடந்து வருகிறது.

ஜாதி, சமயம் கடந்து பல ஊர்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் மக்கள் கூடி அவரவர் சொந்த விழா போல் கொண்டாடி வருகின்றனர்.

* ஆகமம் மற்றும் கோயில் அமைப்பு: இந்த திருக்கோயில் ஆகம முறைப்படி கட்டப்பட்டு பூஜைகள் நடக்கிறது. சுந்தரராஜ பெருமாள் கர்ப்பகிரகம், அர்ந்த மண்டபம், திருமாளிகை பிரகாரம், கருட மண்டபம், அணி வெட்டு மண்டபம், பலி பீடம், துஜதஸ்தம்பம், திருக்கல்யாண மண்டபம் மற்றும் கல்யாண சவுந்தரவல்லி தாயார் கர்ப்ப கிரகம், அர்த்தம் மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபமும், ஸ்ரீ ஆண்டாள் கர்ப்ப கிரகம், அர்த்தம் மண்டபம், மகா மண்டபம் என உயர்ந்த ராஜகோபுரத்துடன் வடக்கு முகமாக வைகை ஆற்றை நோக்கி திருக்கோயில் அமைந்துள்ளது. வெளியில் காவல் தெய்வம் கருப்பண சுவாமி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

மூலவர் பரமசுவாமி, உற்ஸவர் சுந்தரராஜ பெருமாள், கல்யாண சவுந்தரவல்லி தாயார், ஸ்ரீ ஆண்டாள், கிருஷ்ணர், விஸ்வக்சேனர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடாழ்வார், லட்சுமி ஹயக்ரீவர், தன்வந்திரி, ஆழ்வார்கள் மற்றும் நடகோபால நாயகி சுவாமி சன்னதிகள் உள்ளது. மேலும் நவகிரகம் சன்னதியும் உள்ளது.

இக்கோயில் சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களால் நிர்பகிக்கப்படுவதுடன், 5 பேர் கொண்ட டிரஸ்டிகள் தேர்வு செய்யப்பட்டு சிறந்த நிர்வாகத்தின் கீழ் உற்ஸவங்கள் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us