Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இரண்டாம் போகத்திற்கு வைகை தண்ணீர் தர வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

இரண்டாம் போகத்திற்கு வைகை தண்ணீர் தர வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

இரண்டாம் போகத்திற்கு வைகை தண்ணீர் தர வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

இரண்டாம் போகத்திற்கு வைகை தண்ணீர் தர வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : மே 30, 2025 11:51 PM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் 2ம் போகமாக நெல் சாகுபடி நடப்பதால் மகசூல் இழப்பை தவிர்க்க வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வேளாண் இணை இயக்குநர் மோகன்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கர மணியன் முன்னிலை வகித்தனர். கூட்டடத்தில் நடந்த விவாதம்:

மிக்கேல், விவசாயி, பொன்னக்கனேரி, முதுகுளத்துார்: எட்டிவயல் கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த மிளகாய் வளாகத்தில் போதிய குடிநீர், கழிப்பறை வசதியின்றி விவசாயிகள், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். அங்கு பஸ் ஸ்டாப் அமைத்துத்தர வேண்டும். பயிர்காப்பீட்டு தொகை ஏக்கருக்கு 2, 5 சதவீதம் என ரூ.469, 1200 என பெயரளவில் தருகின்றனர். குறைந்தபட்சம் ஏக்கருக்கு 20 சதவீதம் காப்பீடு தொகை தர வேண்டும்.

கலெக்டர்: மிளகாய் வணிக வளாகத்தில் குடிநீர் தொட்டிகள் வைத்துள்ளனர், பஸ் ஸ்டாப் குறித்து போக்குவரத்து துறையினரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். பயிர்காப்பீடு தொகை பாதிப்பு அடிப்படையில் வழங்கப்படுகிறது.

பாலகிருஷ்ணன், சோழந்துார்: ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள பெரிய கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பலர் 2ம் போகமாக நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நன்றாக விளைச்சல் உள்ளது. இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறையால் விளைச்சல் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வைகை அணையில் இருந்து தண்ணீர் பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: பொதுப்பணித்துறை(நீர்வளம்) மூலம் வைகை அணையில் இருந்து தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

முத்துராமு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர், ராமநாதபுரம்: மாவட்டத்தில் விளையும் நெல்லை பாதுகாக்க போதுமான கோடவுன் வசதியில்லை. நெல் அரவை மில் அமைக்க வேண்டும்.

கலெக்டர்: கூட்டுறவு சங்கங்களில் உள்ள கோடவுனில் நெல் மூடைகள் வைக்கலாம். புதிதாக நுகர்பொருள் வாணிபகழகம் சார்பில் கோடவுன்கள் அமைக்கப்பட உள்ளன.

பேச்சிமுத்து, திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் அறிவிக்கப்படாத மின்தடை தொடர்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். சக்கரகோட்டை கண்மாய் நீர் பால்கரை பகுதியில் வீணாகிறது. அதனை விளைச்சல் நிலம் உள்ள இடங்களுக்கு திருப்பிட வாய்க்கால் அமைக்க வேண்டும்.

கலெக்டர்: நீங்கள் சொல்லும் இடத்தில் ஆய்வு செய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்டுபன்றிகளால் பயிர்சேதம் அதிகரித்துள்ளது, அதனை சுடும் உத்தரவை விரைவில் அமல்படுத்த வேண்டும். நிவாரணத்தொகை வழங்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள், வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பாதிப்புள்ள அனைவருக்கும் பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். விவசாயிகளின் புகார் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us