/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சாயல்குடி, கடலாடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கைசாயல்குடி, கடலாடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
சாயல்குடி, கடலாடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
சாயல்குடி, கடலாடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
சாயல்குடி, கடலாடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : பிப் 10, 2024 04:28 AM

சாயல்குடி: -சாயல்குடி, கடலாடி, கடுகுசந்தை, மேலச்செல்வனுார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலாடி, சாயல்குடி சுற்றியுள்ள பிள்ளையார்குளம், காணிக்கூர், வாகைக்குளம், எஸ்.கீரந்தை, டி.வேப்பங்குளம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் அறுவடை செய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் தனியாரிடம் அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்பனை செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பிள்ளையார்குளம் விவசாயி சத்தியமூர்த்தி கூறியதாவது:
சாயல்குடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் அறுவடை கூலி, களை எடுத்தல், உரமிட கடன் பெற்ற தொகையை திருப்ப செலுத்துவதற்காகவும் அவசர தேவைக்காகவும் நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவும் வியாபாரிகள் கேட்கும் விலைக்கே கொடுத்து விடுகின்றனர்.மேலும் 66 கிலோ நெல் மூடை ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவற்றினை இடைத்தரகர்கள் மூலம் பெறும் தனி நபர்கள் சரக்கு லாரிகளில் காரைக்குடி, புதுவயல், சிவகங்கை உள்ளிட்ட அரிசி ஆலைகளுக்கு விற்பனைக்காக பெற்று செல்கின்றனர். ஜோதி மட்டை, சம்பா, ஐ.ஆர்.,20 உள்ளிட்ட பல்வேறு விதமான அரிசி ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடலாடி வேளாண் துறை மற்றும் நெல் கொள்முதல் நிலையம் தொடர்புடைய அலுவலர்கள் கடந்த ஆண்டு போல உரிய நேரத்தில் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும்.
இப்பகுதியில் நிரந்தர கிட்டங்கி வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் அறுவடை செய்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கே சென்று தனி நபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் குறைவான தொகை கிடைக்கிறது. எனவே குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.