/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பாதிப்புஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பாதிப்பு
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பாதிப்பு
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பாதிப்பு
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பாதிப்பு
ADDED : பிப் 25, 2024 05:50 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் குளம்போல தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. போதிய வடிகால் வசதியின்றி மழை நீரும் தேங்குவதால் கொசு உற்பத்தி மையமாகியுள்ளது. இங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உள்ளூர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இருந்தும் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். 700க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புறநோயாளிகளாக தினமும் 2000 பேருக்கும் மேல் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை. குறிப்பாக அன்றாடம் சேகரிக்கப்படும் கழிவு நீரை வெளியேற்றுவதற்கு கூட முறையான கழிவு நீர் வடிகால் வசதியின்றி மருத்தவமனை வளாகத்தில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது.
அவசர சிகிச்சைப்பிரிவுக்கு பின்புறம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு பின்புறம் கழிவுநீர் குளம் போல தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி மையமாகி உள்ளது. இதனால் நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். கொசுத்தொல்லையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் மருத்துவமனை வளாகத்தில் தேங்கும் கழிவுநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
மேலும் கழிவுநீர் மீண்டும் தேங்காத வகையில் வடிகால் வசதி செய்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
-------------