/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம்
ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம்
ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம்
ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம்
ADDED : ஜூன் 01, 2024 09:23 PM

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவில் 850ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு விழா நடந்தது. மே 9ல் மவுலீது ஓதப்பட்டது. மே 19ல் தர்கா வளாகம் முன்புறமுள்ள கொடி பீடம் அமைந்துள்ள இடத்தில் 85 அடி உயர கொடி மரத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் மாலை சந்தனக்கூடு விழாவிற்கான நிகழ்வு துவங்கியது. 4:30 மணிக்கு யானை, குதிரை, ஒட்டகம் உள்ளிட்டவை ஊர்வலமாக சென்று தர்காவில் போர்வை எடுக்கும் விழா நடந்தது.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, ஏர்வாடி முஜாஹிர் நல்ல இப்ராகிம் மஹாலில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு எடுத்து வரப்பட்டது. 45 அடி உயர அலங்காரம் செய்யப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. 15 குதிரைகள் நடனமாடியவாறு சென்றன. ஒட்டகம் மற்றும் யானையின் மீது அலங்கார போர்வை கொண்டுவரப்பட்டு தர்காவை மூன்று முறை வலம் வந்தன.
அதிகாலை 5:30 மணிக்கு தர்காவை ரதம் வந்தடைந்தது. மல்லிகை பூச்சரங்களை சந்தன கூட்டின் மீது வீசி மக்கள் வரவேற்றனர். தொடர்ந்து தர்காவில் சிறப்பு பிரார்த்தனையும், மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடந்தது. பல வண்ண போர்வைகள் போர்த்தப்பட்டு மல்லிகை பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டது.
சந்தனப் பிரசாதத்தை யாத்ரீகர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தவர்கள் மத நல்லிணக்க விழாவில் பங்கேற்றனர். ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இரவு முழுதும் இயக்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஏர்வாடி ஹத்தார் நிர்வாக சபையினர், உறுப்பினர்கள் செய்திருந்தனர். ஜூன் 7 மாலை கொடி இறக்கம் செய்யப்பட்டு நெய் சோறு வழங்கப்படும்.