ADDED : ஜூலை 18, 2024 04:30 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவினர் ஆய்வில் 2 குழந்தைகள் 7 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமலாக்க பிரிவு தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டப்படி அனைத்து நிறுவனங்களிலும் மாவட்ட தடுப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2 குழந்தை தொழிலாளர்கள், 7 வளரிளம் பருவத் தொழிலாளர்கள் பணி புரிந்தது தெரியவந்தது.
அந்நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டப்படி அபராதம், நீதிமன்ற வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நெசவுத்தொழில், ஓர்க் ஷாப்கள், ஓட்டல்கள், கடைகள், தங்கும் விடுதிகள், செங்கல் சூளைகள், இதர தொழில்களில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளையும், 18 வயதிற்குட்பட்ட இளம் சிறார்களையும் பணியில் அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதை மீறினால் ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம், 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கப்படும் என்றார்.