/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ADDED : ஜூன் 18, 2024 05:47 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திறந்த வெளிகள், பள்ளிவாசல்களில்முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இறைவனின் துாதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக பக்ரீத் பண்டிகை முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் அனைத்து ஜமாத்தார் சார்பில் மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். புத்தாடை அணிந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் சார்பில் சந்தைத்திடல் ரோட்டில் சிறப்பு தொழுகையில் பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதே போல் கேணிக்கரை, பட்டணம்காத்தான் ஆகிய புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் பலர் வீடுகளில் தொழுகை நடத்தி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டர். பள்ளிவாசல்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* தொண்டி பல்லாக்கு ஒலியுல்லா திடலில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.--------
* ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் ஜமாத்தார்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக ஜமாத்தார்கள் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட பின் மீண்டும் ஊர்வலமாக சென்று பெரிய பள்ளியை அடைந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து விழா கொண்டாடினர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்.எஸ்.மங்கலம் கிளை சார்பில் ஆர்.எஸ். மங்கலத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கிளைத் தலைவர் சல்மான் தலைமையில் ஆலிம் பஷீர் கிராத் ஓதி தொழுகை நடத்தினார். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
* தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அதிகாலை புத்தாடைகள் உடுத்தி ஈத்கா மைதான திடல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உலக நன்மைக்கான சிறப்பு தொழுகைகள் நடந்தது.
குர்பானி எனப்படும் இறைச்சியை மூன்று பங்காக்கி ஒன்றை தங்களுக்காகவும், மற்றொன்றை அண்டை அயலாருக்கும், மூன்றாவது பங்கை ஏழை எளியவர்களுக்கும் வழங்கினர்.
கீழக்கரையில் உள்ள 8 ஜமாத்திலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. தெற்கு தெரு ஜமாத் பள்ளிவாசல் தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம் தலைமையிலும், வடக்கு தெரு ஜமாத் தலைவர் ரத்தின முகமது, மேலத்தெரு ஜும்மா பள்ளிவாசலில் தலைவர் முஜிப் ரகுமான், கிழக்கு தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சேகு அபூபக்கர் சாகிப், நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் கியாதுதீன் தலைமையிலும் சிறப்பு தொழுகைகள் நடந்தது.
பெரியபட்டினம், தினைக்குளம், ஏர்வாடி, சிக்கல், வாலிநோக்கம், ஒப்பிலான், மாரியூர், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழுகை நடந்தது. காலை 9:00 மணி மற்றும் 10:00 மணி ஆகிய நேரங்களில் தனித்தனியாக திடல் தொழுகை நடந்தது. பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி உள்ளிட்டவைகளை வழங்கினர்.