ADDED : மே 28, 2025 12:54 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை தண்ணீர் பாயும், காவிரி கடைமடை பகுதியில், 32,000 ஏக்கர் சம்பா சாகுபடி நடைபெறும். கல்லணை கால்வாயில் இருந்து, 170க்கும் அதிகமான கிளை கால்வாய்கள் பிரிகின்றன.
இந்த கால்வாய் வாயிலாக, 179க்கும் அதிகமான ஏரிகள், கண்மாய் மற்றும் குளங்களில் மேட்டூர் அணை நீர் நிரப்பப்பட்டு, விவசாயம் நடக்கிறது.
இந்நிலையில், கல்லணை கால்வாயில் கரை உடைப்புகளை தடுக்கவும், கடைமடை எல்லை பகுதியான மும்பாளை வரை சீரான அளவில் தண்ணீர் செல்லவும், கால்வாய் கரைகளில் கான்கிரீட் தடுப்பு சுவர், தரைத்தளம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கி, தற்போது வரை ஆமை வேகத்தில் நடக்கின்றன.
கல்லணையிலிருந்து, புதுக்கோட்டை மாவட்ட காவிரி கடைமடை பகுதியான மும்பாளை வரை, 148.65 கி.மீ., துாரத்தில், கடந்த ஆண்டு, 92.20 கி.மீ., வரை கால்வாய்க்குள் தடுப்புச்சுவர், தரைத்தளம் அமைக்கப்பட்டுஉள்ளது.
இந்தாண்டு, 56.45 கி.மீ., அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், வழக்கம் போல காவிரி கடைமடை விவசாய பகுதிகள் காய்ந்து விடும் நிலை உள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் ரமேஷ் கூறுகையில், ''மேட்டூர் அணை நிரம்பி வரும் நிலையில், இன்னும் 15 தினங்களில், கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரும்.
''கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடைக்கு வந்து சேர, விரைந்து கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும்,'' என்றார்.