Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/பிரம்மாண்டமாக நடைப்பெற்ற காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழா

பிரம்மாண்டமாக நடைப்பெற்ற காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழா

பிரம்மாண்டமாக நடைப்பெற்ற காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழா

பிரம்மாண்டமாக நடைப்பெற்ற காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழா

ADDED : ஜூன் 25, 2024 09:35 AM


Google News
Latest Tamil News
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா' எனும் பயிற்சி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று (23-06-2024) புதுக்கோட்டை திருவரங்குளத்தில் அமைந்துள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இவ்விழாவை புதுக்கோட்டை ராஜ்யசபா உறுப்பினர் திரு. M. M. அப்துல்லா அவர்கள் துவங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஒருசேர மேம்படுத்த களத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் முக்கனிகள் சார்ந்து உணவுக்காடு உற்பத்தி செய்வது குறித்து இவ்விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவின் நோக்கம் குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில் 'தற்சமயம் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால், பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். குறிப்பாக இந்த ஆண்டு மாம்பழத்தில் வெறும் 30% மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. பலாவின் காய்ப்பு பாதியாக குறைந்து விட்டது, கணிக்க முடியாத சூறாவளிக் காற்று வீச்சினால் வாழை விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அனைத்திற்கும் தீர்வாக நம் பாரம்பரியத்தில் இருக்கும் பலப் பயிர், பல அடுக்கு முறையை பின்பற்ற வேண்டும். எனவே உணவுக்காடு வளர்ப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவவும், மண்ணில் நுண்ணுயிர்களை பெருக்கவும், ஆரோக்கியமான வாழ்வை பெறவும் முடியும். இதனை வலியுறுத்தும் விதமாகவே இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது' எனப் பேசினார்.

இவ்விழாவை துவங்கி வைத்த MP அப்துல்லா அவர்கள் பேசுகையில், 'ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனமாக இருக்க வேண்டும். ஆனால் இன்று நம் நாட்டில் வெறும் 21% தான் வனமாக இருக்கிறது. ஒருப்பயிர் சாகுபடியில் சென்றதால் தான் இந்நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த சூழலை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஈஷா அமைப்பிற்கும், மற்ற தோழர்களுக்கும் வாழ்த்துகள். பாரம்பரியத்திலிருந்து முற்றிலும் விலகி விடாமல் அதே நேரத்தில் விஞ்ஞானம் எங்கு தேவை, இயற்கை எங்கு தேவை என்ற சமநிலையான புரிதலோடு விவசாயத்தை அணுகினால் இதில் வெற்றி பெறலாம்.' எனப் பேசினார்.

மேலும் இவ்விழாவில் சித்த மருத்துவர் Dr.கு. சிவராமன் அவர்களின் 'நோய்க்கு தீர்வு நல்ல உணவுக்கான தேடலே' என்ற தலைப்பிலான காணொளி உரை திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூழலியலாளர் திரு. ஏங்கல்ஸ் ராஜா, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் Dr.ஆர்.செல்வராஜன், பெங்களூர் IIHR -இன் முதன்மை விஞ்ஞானி Dr.ஜி. கருணாகரன், கேரளா மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CTCRI) முதன்மை விஞ்ஞானி ஆர். முத்துராஜ், இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்ப கழகத்தை (NIFTEM) சேர்ந்த முனைவர். வின்சென்ட் ஆகியோர் உணவுக்காடு குறித்த பல முக்கியத் தலைப்புகளில் பேசினர்.

மேலும் அக்ரி.பி. ஹரிதாஸ், இயற்கை மருத்துவர் கோ. சித்தர், கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர், குருபிரசாத் ஆகிய உணவுக்காடு முன்னோடி விவசாயிகளும், வல்லுநர்களும் முக்கனி விவசாயம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா மற்றும் வாழைப்பழ ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டது. இத்துடன் முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று குறிப்பிட்ட சில வகை மா மற்றும் பலா கன்றுகளை வாங்கிச் சென்றனர். கேரளாவை சேர்ந்த சக்கை கூட்டம் அமைப்பினரின் பலாவை கொண்டு செய்யப்படும் பல்வேறு உணவு பொருட்களின் கண்காட்சி மக்களை பெரிதும் ஈர்த்தது.

காவேரி கூக்குரல் இயக்கம் இவ்விழாவை இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) ஆகிய 4 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us