/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ ஆசிரியர் இல்லாத அரசு பள்ளி: மாணவர், பெற்றோர் அதிர்ச்சி ஆசிரியர் இல்லாத அரசு பள்ளி: மாணவர், பெற்றோர் அதிர்ச்சி
ஆசிரியர் இல்லாத அரசு பள்ளி: மாணவர், பெற்றோர் அதிர்ச்சி
ஆசிரியர் இல்லாத அரசு பள்ளி: மாணவர், பெற்றோர் அதிர்ச்சி
ஆசிரியர் இல்லாத அரசு பள்ளி: மாணவர், பெற்றோர் அதிர்ச்சி
ADDED : ஜூலை 08, 2024 11:55 PM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 111 மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், மூன்று இடைநிலை, மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றினர். கடந்த ஆண்டு இரு இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வில் சென்றனர்.
மற்றொரு ஆசிரியை மகப்பேறு விடுப்பில் சென்றார். மூன்று இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கும், மூன்று தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு பட்டதாரி ஆசிரியர் மட்டும், நிர்வாக காரணத்தால் கடந்த ஆண்டு வேறொரு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்போதைய பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில், இப்பள்ளி தலைமை ஆசிரியர் திருக்கட்டளைக்கு மாறுதலாகி சென்றார். நேற்று முன்தினம் நடந்த கலந்தாய்வில் இரு பட்டதாரி ஆசிரியர்களில் ஒருவர் கீழாத்துாருக்கும், மற்றொருவர் செரியலுாருக்கும் இடமாறுதலில் சென்றனர். இதனால், பள்ளியில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் பள்ளி முன் குவிந்து போராட்டத்திற்கு ஆயத்தமாகினர். கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கினர்; அங்கு பணியாற்றி மாறுதலில் சென்ற இரண்டு ஆசிரியர்களை தற்காலிகமாக பாடம் நடத்த உத்தரவிட்டனர். அதன்படி இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினர்.
இதே போல, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், ஆயிங்குடி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பணிபுரிந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
பணிபுரிந்த ஒட்டுமொத்த ஆசிரியர்களும் பணிமாறுதல் பெற்று சென்று விட்டனர். ஒரே கல்வி மாவட்டத்தில் இரு நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.