/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ களைகளின் பிடியில் மலைகளின் அரசி! ஒழிப்பது எப்போ? அரசே யோசி களைகளின் பிடியில் மலைகளின் அரசி! ஒழிப்பது எப்போ? அரசே யோசி
களைகளின் பிடியில் மலைகளின் அரசி! ஒழிப்பது எப்போ? அரசே யோசி
களைகளின் பிடியில் மலைகளின் அரசி! ஒழிப்பது எப்போ? அரசே யோசி
களைகளின் பிடியில் மலைகளின் அரசி! ஒழிப்பது எப்போ? அரசே யோசி
ADDED : ஜூன் 25, 2025 10:06 PM

-நிருபர் குழு-
ஆங்கிலேயர்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பு, நீலகிரிக்கு வந்தவுடன், 'தங்கள் நாட்டில் உள்ள இதமான காலநிலை இப்பகுதியில் நிலவ வேண்டும்,' என்ற நோக்கத்திற்காக கடும் குளிரான இப்பகுதியில், 400 வகையான தாவர இனங்களை இங்கு அறிமுகப்படுத்தினர்.
அதில், உள்ளூரில் எரிபொருளாக பயன்படுத்த அறிமுகப்படுத்திய, கற்பூரம், சீகை போன்ற மர வகைகள் உள்ளூர் மரங்களையும், தாவரங்களையும் வளர விடாமல் பெருமளவில் அழித்துவிட்டன. மேலும், 'லாண்டனா கமரா' என்ற உண்ணி செடி; 'பார்த்தீனியம்' மற்றும் 'சிஸ்ட்ரம் ரொபஸ்டிக்கம்', இப்படோரியம் போன்ற அன்னிய களை செடிகள் மாவட்டத்தின் சூழலை அழித்து வருகின்றன. இங்கு வளரும் அனைத்து தாவர வகைகளும், மரங்களும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், இயற்கையால் வடிவமைக்கப்பட்டவை.
வனத்துக்கு எந்த பயனும் இல்லை
ஆனால், ஆங்கிலேயர்களால், அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறிகள், பூக்கள் மற்றும் மர வகைகள், களை செடிகள் இந்த மண்ணுக்கு உரியவையாக இல்லாததால், தண்ணீரை அதிகளவில் உறிஞ்சி வருகின்றன. அதில், சிறிய வண்ண பூக்களுடன் காணப்படும் உண்ணி செடிகள் அழகுக்காக வீட்டு வேலிகளில் சிலர் வளர்த்து வருகின்றனர். சாலையோரங்களில் பயணிகளை கவர நுாற்றாண்டு காலமாக வளர்க்கப்பட்டன. இவை வண்ணமயமாக காணப்பட்டதாலும், வனத்துக்கும், வனவிலங்குகளுக்கும் எந்த வகையிலும் பயன்படுவதில்லை.
மாறாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வனப்பகுதிகளை ஆக்கிரமித்து வளரும் இத்தகைய களை செடிகளால் தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக் கூடிய தாவரங்கள், வளர்வது தடைப்படுகிறது.
கோடை காலத்தில் தீப்பற்றும் தன்மை கொண்ட இவையால், வனத்தீ அபாயம் ஏற்படுகிறது. பார்த்தீனியம் செடிகள், மனிதர்கள், வனவிலங்குகளுக்கும் சுவாசம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. பள்ளி வளாகங்களில் இவை காணப்படுவதால், குழந்தைகள் செடிகளை பறித்து விளையாடுவதால் தோல் வியாதிகள் ஏற்படுகிறது.
கோர்ட் உத்தரவால் அகற்றும் பணி
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து, அன்னிய மரமான, சீகை, கற்பூர மரங்கள் களை செடி குறித்த கணக்கெடுப்பு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தொடர்ந்து, நீதிபதிகள் உத்தரவுப்படி, வனப்பகுதிகளில் உள்ள உண்ணி செடிகள், அன்னிய மரங்களை வனத்துறையினர் அகற்றி வருகின்றனர்.
ஆனால், மாவட்டம் முழுவதும் அதிகம் ஆக்கிரமித்து வரும் பார்த்தீனியம், 'இப்படோரியம்' களை செடிகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை இல்லை. இவைகளால், எதிர்காலத்தில் வன விலங்குகளுக்கு கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.
முதுமலை வனத்துறையினர் கூறுகையில், 'மாவட்ட வனப்பகுதிகளில், ஐகோர்ட் உத்தரவுப்படி அன்னிய மரங்கள், களைச்செடிகள் அகற்றி வருகிறோம். நடப்பாண்டு, 1,500 எக்டர் பரப்பளவில் உண்ணி செடிகள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு, 1,500 எக்டர் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளில், தாவர உண்ணிகள் விரும்பும் தாவரங்கள் இயற்கையாக வளர்வதுடன், வனத்துறை சார்பில் புற்கள் நடவு செய்து வளர்த்து வருகிறோம். இப்பணிகள் தொடரும்,' என்றனர்.