ADDED : ஜன 04, 2024 10:50 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்தில் காலை சிற்றுண்டி மற்றும் சத்துணவு சமையல் பொருட்கள் இருப்பு அறை உள்ளது. இங்கு கடந்த ஆண்டு அக்., 29ம் தேதி வந்த யானைகள் சத்துணவு பொருட்கள் இருப்பு அறையின் கதவை உடைத்து, அரிசி மூட்டையை துாக்கி சென்றன.
தொடர்ந்து, கதவு சீரமைக்கப்பட்டு மீண்டும் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்ட நிலையில், மறுநாள் இரவும் யானைகள் இங்கு வந்துள்ளன. இரவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் யானைகளை அங்கிருந்து விரட்டினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பள்ளி வளாகத்திற்கு கீழ்ப்பகுதியில் உள்ள புத்துாரில் முகாமிட்டிருந்த யானைகளில் மூன்று யானைகள் பள்ளி வளாகத்திற்கு வந்துள்ளன. அதில், ஒரு யானை சத்துணவு சமையல் பொருட்கள் இருப்பு கூடத்தின் கதவை உடைத்து, அரிசி மூட்டையை துாக்கி சென்றுள்ளது.
யானைகள் அரிசியை ருசிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, வனக் குழுவினர் வந்து யானைகளை அங்கிருந்து துரத்தி உள்ளனர்.
தொடர்ச்சியாக, இந்த பள்ளியின் சத்துணவு சமையல் கூடத்திற்கு விசிட் செய்யும் யானைகளால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.