/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்
நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்
நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்
நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்
ADDED : மே 21, 2025 02:01 AM

ஊட்டி:நம் நாட்டின் அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவரும், மூத்த அணு விஞ்ஞானியுமான டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் வயோதிகம் காரணமாக காலமானார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் எம்.ஆர்.சீனிவாசன், 95. இவர், 1930ல் பிறந்தார்; 1955ம் ஆண்டு இந்திய அணு சக்தி துறையில் பணியில் சேர்ந்தார்.
நாட்டின் முதல் அணு ஆராய்ச்சி உலையான அப்சராவின் கட்டுமானத்தில், டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து பணியாற்றினார்.
கடந்த 1959ல், நாட்டின் முதல் அணுமின் நிலையத்தின் கட்டுமானத்திற்கான முதன்மை திட்ட பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 1967ல் சென்னை அணுமின் நிலைய தலைமை திட்ட பொறியாளராக பொறுப்பேற்ற அவர், 1984ல் அணுசக்தி துறை செயலராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 1987- முதல் 90 வரை, நம் நாட்டின் அணுசக்தி ஆணைய தலைவராக பதவி வகித்தார்.
அணுசக்தி திட்டத்திற்கு இவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, நாட்டின் உயரிய விருதான பத்மவிபூஷன் விருதை, மத்திய அரசு இவருக்கு 2015ம் ஆண்டு வழங்கி கவுரவித்தது.
அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல பதவிகளை வகித்த எம்.ஆர்.சீனிவாசன், பணியில் இருந்து ஓய்வு பெற்றபின், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் வசித்தார்.
சில நாட்களாக, வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.
அவரது உடலுக்கு நீலகிரி கலெக்டர் லட்சுமி பாவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். உள்ளூர் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அவரது மகன் ரகுவீர், ஐரோப்பிய நாடான பின்லாந்து நாட்டில் இருந்து வந்த பின், குன்னுார் வெலிங்டனில் நாளை இறுதிச்சடங்கு நடத்த குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.