/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வனத்துறை பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்வனத்துறை பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
வனத்துறை பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
வனத்துறை பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
வனத்துறை பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
ADDED : ஜன 10, 2024 10:40 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே மேங்கோரேஞ்ச் என்ற இடத்தில், கடந்த ஆறாம் தேதி அங்கன்வாடி சென்று தாயாருடன் திரும்பிய, மூன்று வயது குழந்தையை சிறுத்தை தூக்கி சென்றதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தொடர்ந்து மனிதர்களை தாக்கி வரும் சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
மீண்டும் அதே பகுதியில் வேறு சிறுத்தை நடமாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அச்சம் அடைந்ததுடன், பெற்றோரும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை.
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கவுன்சிலர், 'பாதுகாப்புடன் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்,' என, வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
தொடர்ந்து, நேற்று காலை வனச்சரகர் சஞ்சீவி, வனவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் ஜாபீர், தலைமை ஆசிரியர் செல்வி, வனக்காப்பாளர் ராமகிருஷ்ணன், வேட்டை தடுப்பு காவலர்கள் கூத்தையன், சீனிவாசன், சந்தீப் உள்ளிட்ட குழுவினர், மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வனத்துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
மாலையில் வீடுகளுக்கு இதேபோல் வனத்துறை வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வரை, மேங்கோரஞ்ச் அரசு துவக்க பள்ளிக்கு செல்லும், மாணவர்கள் வனத்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுவர்,' என்றனர்.
இதனால், பெற்றோர், மாணவர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.