/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கேரள கொலை சம்பவத்தில் பலருக்கு தொடர்பு,: இருவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை கேரள கொலை சம்பவத்தில் பலருக்கு தொடர்பு,: இருவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை
கேரள கொலை சம்பவத்தில் பலருக்கு தொடர்பு,: இருவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை
கேரள கொலை சம்பவத்தில் பலருக்கு தொடர்பு,: இருவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை
கேரள கொலை சம்பவத்தில் பலருக்கு தொடர்பு,: இருவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை
ADDED : ஜூன் 30, 2025 06:39 AM

பந்தலுார்:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடந்த கொலை சம்பவத்தில், 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரி நடபாலம் பகுதியை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன்,53. கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் அருகே வாடகை வீட்டில் குடியிருந்த நிலையில், இவர் கடந்த, 2024 மார்ச் 20ல் காணாமல் போய் உள்ளார். இது குறித்து ஏப்., முதல் தேதி இவரின் மனைவி சுபிஷா கொடுத்த புகாரை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ஹேமச்சந்திரன் கொலை செய்யப்பட்டு, தமிழக எல்லைக்கு உட்பட்ட பந்தலுார் அருகே காபிக்காடு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது. நேற்று முன்தினம் உடலை மீட்ட போலீசார், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியில் பிரேத பரிசோதனை செய்து, கேரளா மாநிலத்திற்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கேரளா மாநில போலீசார் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட ஹேமச்சந்திரன் பல்வேறு நபர்களிடம், குறைந்த வட்டிக்கு பணத்தை வாங்கி கூடுதல் வட்டிக்கு கொடுத்து வட்டி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர், கேரளா வயநாடு பகுதியை சேர்ந்த நவ்சாத் என்பவரிடம், வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காத நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹேமச்சந்திரனுடன் தொடர்பில் இருந்த ஒரு பெண்ணின் உதவியுடன், அவர், கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கிருந்து, அவரை காரில் கடத்திசென்று, பத்து நாட்கள் பல இடங்களில் சுற்றிய பின், கேரளாவில் கொலை செய்துள்ளனர். பின், தமிழக எல்லைக்கு உட்பட்ட பந்தலுார் அருகே காபிக்காடு என்ற இடத்தில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான வனப்பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் புதைத்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பான விசாரணையின் போது கைது செய்யப்பட்ட, கேரளா மாநிலம் வயநாடு மாடக்கரா பகுதியை சேர்ந்த ஜோதிஷ்குமார்,28, வெள்ளைபனா பகுதியை சேர்ந்த அஜேஷ்,27, ஆகியோர் அடக்கம் செய்த தகவல் குறித்து தெரிவித்தனர்.
டி.என்.ஏ., பரிசோதனைக்கு பின்னரே முழு விபரம் தெரிய வரும். இந்த கொலை வழக்கில், 10க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு உள்ளது. அதில், தமிழகத்தில் சிலருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.