/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கேபிள் வயர் அமைத்து தடையில்லாத மின் சப்ளை வழங்க கோரிக்கை கேபிள் வயர் அமைத்து தடையில்லாத மின் சப்ளை வழங்க கோரிக்கை
கேபிள் வயர் அமைத்து தடையில்லாத மின் சப்ளை வழங்க கோரிக்கை
கேபிள் வயர் அமைத்து தடையில்லாத மின் சப்ளை வழங்க கோரிக்கை
கேபிள் வயர் அமைத்து தடையில்லாத மின் சப்ளை வழங்க கோரிக்கை
ADDED : மே 19, 2025 08:41 PM

கூடலுார்; 'கூடலுார் வனப்பகுதி வழியாக செல்லும் மின்கம்பிகளுக்கு மாற்றாக, கேபிள் வயர் அமைத்து தடையின்றி மின் சப்ளை வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் பகுதிக்கு உப்பட்டி, சேரம்பாடி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களிலிருந்து, மின் சப்ளை செய்து வருகின்றனர். துணை மின் நிலையிலிருந்து குடியிருப்புக்கு மின் சப்ளை செய்யும் மின் கம்பிகளில் 100 கி.மீ., துாரம் வனப்பகுதி வழியாகவே செல்கிறது.
காற்று மற்றும் பருவமழையின் போது வனப்பகுதியில் மரக்கிளைகள் மின் கம்பிகளில் விழுந்து, மின் சப்ளை தடைப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், முதுமலை புலிகள் குடியிருப்புகளுக்கு தொரப்பள்ளி, தெப்பக்காடு இடையே வனப்பகுதி வழியாக சென்ற மின் கம்பிகளுக்கு மாற்றாக, 5 கோடி ரூபாய் செலவில், 11 கி.மீ., தூரத்துக்கு கேபிள் வயர் (வான் வழி தொகுப்பு கம்பி) அமைத்து மின் சப்ளை வழங்க துவங்கியுள்ளனர்.
இதன் மூலம், தடையின்றி மின் சப்ளை வழங்கப்படுவதுடன், வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கூடலுார் வனப்பகுதி வழியாக செல்லும், மின் கம்பிகளுக்கு மாற்றாக கேபிள் வயர் அமைத்து மின் சப்ளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மின் நுகர்வோர் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் காற்று மற்றும் பருவமழையின் போது, மரக்கிளைகள் விழுந்து, மின்கம்பிகள் சேதமடைந்து மின் சப்ளை துண்டிக்கப்படுகிறது. இதனை கண்டுபிடித்து சீரமைக்க பல மணி நேரங்கள் ஆகிறது.
பருவ மழை காலங்களில், ஒரு நாள் முழுவதும் மின் சப்ளை இன்றி சிரமப்படும் சூழல் உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில், இரவில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டால் மக்கள், வனவிலங்கு அச்சம் காரணமாக, அவசர தேவைக்கு கூட வெளியே வர முடியாது சூழல் உள்ளது.
எனவே, தொரப்பள்ளி -- தெப்பக்காடு இடையே அமைக்கப்பட்டது போன்று, கூடலுாரில் வனப்பகுதி வழியாக செல்லும் மின் கம்பிகளுக்கு மாற்றாக, கேபிள் வயர் அமைத்து மின் சப்ளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.