Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுாரில் 'டைடல் பார்க்' அமைக்க ஆர்வம் காட்டாத தனியார் நிறுவனங்கள்

குன்னுாரில் 'டைடல் பார்க்' அமைக்க ஆர்வம் காட்டாத தனியார் நிறுவனங்கள்

குன்னுாரில் 'டைடல் பார்க்' அமைக்க ஆர்வம் காட்டாத தனியார் நிறுவனங்கள்

குன்னுாரில் 'டைடல் பார்க்' அமைக்க ஆர்வம் காட்டாத தனியார் நிறுவனங்கள்

ADDED : செப் 11, 2025 11:58 PM


Google News
சென்னை:நீலகிரி மாவட்டம் குன்னுாரில், பி.பி.பி., எனப்படும் பொது - தனியார் கூட்டு முயற்சியில் 'டைடல் பார்க்' அமைக்க, தனியார் நிறுவனங்களிடம் ஆர்வம் இல்லை.

தமிழக அரசின், 'டைடல் பார்க்' நிறுவனம், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சர்வதேச தரத்தில், 'டைடல் பார்க்' பெயரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை கட்டுகிறது. அங்குள்ள அலுவலக இடங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.

இதுவரை, டைடல் பார்க் நிறுவனமே, ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக டைடல் பார்க் கட்டடத்தை கட்டி பராமரிக்கிறது.

முதல் முறையாக, பி.பி.பி., மாடலில், நீலகிரி மாவட்டம், குன்னுாரில் உள்ள எடப்பள்ளி என்ற இடத்தில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

இந்த பூங்கா கட்டுமான பணிக்கு, 8 ஏக்கர் நிலத்தை அரசு குத்தகைக்கு வழங்கும். அங்கு, தனியார் நிறுவனம் சொந்த செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து, நிறுவனங்களுக்கு வாடகை விட வேண்டும். அந்த கட்டடத்தை, 45 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்.

வாடகை வருவாயை தனியாரும், டைடல் பார்க் நிறுவனமும் பகிர்ந்து கொள்ளும். ஒப்பந்த காலத்திற்கு பின், பூங்காவை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதுதான் பி.பி.பி., மாடல்.

டெண்டர் தொடர்பாக நிறுவனங்களின் சந்தேகங்களை விளக்கும் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், ஒரு நிறுவனம் கூட பங்கேற்கவில்லை.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசு வழங்கும் இடத்தில் தனியார் நிறுவனங்கள், 40 - 50 கோடி ரூபாய் முதலீடு செய்து, கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டும். டெண்டர் சந்தேகம் விளக்கும் கூட்டத்தில், ஒரு நிறுவனம் கூட வராததால், பி.பி.பி., மாடலில் ஆர்வம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க, வரும் 15ம் தேதி கடைசி நாள். அன்று நிறுவனங்கள் பங்கேற்குமா என, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us