ADDED : பிப் 05, 2024 11:22 PM

மேட்டுப்பாளையம்;காரமடை ஊராட்சி ஒன்றியம் மருதுார் ஊராட்சி, சிவன்புரம் நரிக்குறவர் காலனியில், 25க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் கூலி வேலை மற்றும் சுயத்தொழில் செய்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக தெருவிளக்குகள் இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மருதுார் ஊராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால், மின் கம்பங்கள் நடப்பட்டன. ஆனால் அதில் பல மாதங்களாக தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை.
இதுகுறித்து, சிவன்புரம் மக்கள் கூறுகையில், 'இரவு நேரங்களில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் இரவில் வீட்டை விட்டு கூட வெளியே வர முடியாத நிலை உள்ளது. தெரு விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.