Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சின்ன வெங்காயம் விலை தொடர் சரிவு

சின்ன வெங்காயம் விலை தொடர் சரிவு

சின்ன வெங்காயம் விலை தொடர் சரிவு

சின்ன வெங்காயம் விலை தொடர் சரிவு

ADDED : பிப் 05, 2024 11:50 PM


Google News
பெ.நா.பாளையம், பிப். 6--

கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூர் பகுதியில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும், கோவைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து இருக்கும். இது தவிர, கோவை மாவட்டத்தில் உடுமலை, பொள்ளாச்சி உட்பட பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும். கடந்தாண்டு அக்., -- நவ., மாதங்களில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் வெங்காயத்தின் அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்ன வெங்காயம், 100 ரூபாய் வரை விற்பனையானது.

பின், சின்ன வெங்காயத்துக்கு மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைத்ததால், விவசாயிகள் பலரும் சின்ன வெங்காயத்தை பயிரிட துவங்கினர். தற்போது, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து டன் கணக்கில், சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வார சந்தைகளிலும், காய்கறி சில்லறை விற்பனை நிலையங்களிலும், சின்ன வெங்காயத்தின் விலை, 100 ரூபாய்க்கு ஏழு கிலோ என விற்பனையாகி வருகிறது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'கர்நாடக மாநிலம், மைசூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் கிலோ ஐந்து ரூபாய் என விற்பனையாகிறது. அங்கிருந்து லாரியில் கொண்டு வரும் கட்டணம், ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவுகளுடன் மார்க்கெட்டுகளில் தற்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவையில் உள்ள மொத்த மார்க்கெட்டுகளுக்கு நாள் ஒன்றுக்கு, 100 டன் வரத்து இருந்த சின்ன வெங்காயம், தற்போது, 200 டன் என உயர்ந்துள்ளது. மைசூர் வட்டாரத்தில் இருந்து சின்ன வெங்காயத்தின் வரவு இன்னும் அதிகரிக்கும் என்ற நிலை உள்ளதால், மேலும் விலை சரியலாம். பெரிய வெங்காயத்தின் விலை தரத்தை பொறுத்து கிலோ, 15 முதல், 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us