/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பசுந்தேயிலைக்கு விலை கிடைக்காமல் பாதிப்பு; முதல்வர் வரை மனு கொடுத்தும் ஏமாற்றம் மிச்சம்பசுந்தேயிலைக்கு விலை கிடைக்காமல் பாதிப்பு; முதல்வர் வரை மனு கொடுத்தும் ஏமாற்றம் மிச்சம்
பசுந்தேயிலைக்கு விலை கிடைக்காமல் பாதிப்பு; முதல்வர் வரை மனு கொடுத்தும் ஏமாற்றம் மிச்சம்
பசுந்தேயிலைக்கு விலை கிடைக்காமல் பாதிப்பு; முதல்வர் வரை மனு கொடுத்தும் ஏமாற்றம் மிச்சம்
பசுந்தேயிலைக்கு விலை கிடைக்காமல் பாதிப்பு; முதல்வர் வரை மனு கொடுத்தும் ஏமாற்றம் மிச்சம்
ADDED : மே 20, 2025 10:40 PM

குன்னுார்: நீலகிரியில், பசுந்தேயிலை பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசுக்கு மனுக்கள் பல கொடுத்தும் தீர்வு காணப்படாமல் உள்ளதால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தேயிலை விவசாயத்தை நம்பி உள்ளனர். கடந்த, 25 ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கு, அதன் உற்பத்தி செலவை கூட ஈடுசெய்ய இயலாத, குறைந்த விலையை பெற்று வருகின்றனர். பசுந்தேயிலை கிலோவிற்கு, 40 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் தீர்வு இல்லை.
இது தொடர்பாக, நடந்த பல்வேறு போராட்டங்களில், 'சிறு தேயிலை விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்துசெய்வது ; கடந்த பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பு அறிவித்த தேர்தல் வாக்குறுதிபடி, சிறு தேயிலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் நியாய விலையை கூட்டுறவு தேயிலை விவசாயிகளுக்கு வழங்குவது, தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணத்தை கொண்டு வருவது,' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இந்த கோரிக்கைளுக்கு எவ்வித பயனும் மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக, சமீபத்தில் சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில முதல்வரிடமும் நேரில் மனு கொடுக்கப்பட்டது.
சங்க தலைவர் சுப்ரமணியம் கூறியதாவது:
தேயிலை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மனுக்கள் அனுப்பியும், நிரந்தர தீர்வு காணப்படவில்லை. குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்த போதும், மாநில அரசு, தன் பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. மாநில அரசின், 'இன்கோ' கீழ் உள்ள, 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு, 25 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பசுந்தேயிலையை வினியோகம் செய்து வரும் நிலையில், நிர்வாக திறமையின்மை மற்றும் விவசாய விரோத போக்கு காரணமாக இதற்கான தீர்வு சாத்தியப்படவில்லை.
சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில், மாதம்தோறும் தேயிலை வாரியம், அறிவிக்கும் பசுந்தேயிலைக்கான மாதாந்திர விலையை முறையாக வழங்குவதில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேயிலை வாரிய அதிகாரியும் மவுனம் காக்கிறார். இது மத்திய மற்றும் மாநில அரசுகளின், விவசாய விரோத போக்கை பறைசாற்றுகிறது.
'கடந்த அக்., மாதத்திற்கான நிலுவை தொகையான, 1.40 கோடி வழங்க வேண்டும்,' என, துறை சார்ந்த மாநில அமைச்சர் அறிவுறுத்தியும் இதுநாள் வரை வழங்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த பிரச்னைக்கு மாநில முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.