Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தடை செய்யப்பட்ட சுரங்க பகுதிகளில் தொடரும் தங்க வேட்டை! உயிர் பலிகள் தொடர்ந்தும் அச்சமில்லாமல் அத்துமீறல்

தடை செய்யப்பட்ட சுரங்க பகுதிகளில் தொடரும் தங்க வேட்டை! உயிர் பலிகள் தொடர்ந்தும் அச்சமில்லாமல் அத்துமீறல்

தடை செய்யப்பட்ட சுரங்க பகுதிகளில் தொடரும் தங்க வேட்டை! உயிர் பலிகள் தொடர்ந்தும் அச்சமில்லாமல் அத்துமீறல்

தடை செய்யப்பட்ட சுரங்க பகுதிகளில் தொடரும் தங்க வேட்டை! உயிர் பலிகள் தொடர்ந்தும் அச்சமில்லாமல் அத்துமீறல்

ADDED : செப் 21, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
பந்தலுார்: பந்தலுார் தேவாலா மற்றும் நாடுகாணி சுற்றுவட்டார பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சுரங்க குழிகள் அமைத்து தங்க படிமங்கள் எடுக்கும் பணி அதிகரித்துள்ள நிலையில், உயிர்பழிகள் தொடர்கிறது.

பந்தலுார் தேவாலா மற்றும் மலபார் பகுதியை ஒட்டிய கிளன்ராக் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, 1831ல், ஆங்கிலேயர் காலத்தில் லண்டனை சேர்ந்த ஹூகேனின் என்பவர், தங்க படிமங்கள் இருப்பதை கண்டறிந்தார். அதன்பின், 'ஆல்பா கோல்டு மைனிங்' என்ற கம்பெனியினர், தேவாலா பகுதியை ஒட்டி அரை கிலோ மீட்டர் சுற்றளவில், சுரங்க பாதைகள் அமைத்தனர்.

தொடர்ந்து, 1879ல், 'லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிங்' நிறுவனத்தினர், அந்த பகுதியில் சுரங்கம் தோண்டி தங்கம் வெட்டி எடுத்தனர். தங்க கட்டிகள் அதிகம் இருந்ததால் சுரங்க பாதைகளுக்கு நடுவில், சிறிய தண்டவாளங்கள் அமைத்து அதன் வழியாக தங்கங்களை வெளியே கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னர், தங்க சுரங்கங்கள் அருகில் செல்ல, மத்திய அரசு தடை விதித்தது.

சட்ட விரோத சுரங்கங்கள் அதிகம்

ஆனால், அதையும் மீறி அப்பகுதியை சேர்ந்த பலரும் கடந்த காலங்களில் பழைய தங்க சுரங்க குழிகளில் தங்கங்களை சேகரித்து வருகின்றனர். தற்போது, தேவாலா சுற்றுவட்டார பகுதிகளில், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான சுரங்கங்களை அமைத்துள்ளனர். அதன்பின், அங்கு கிடக்கும் தங்க படிமங்கள் உள்ள பாறைகளை உடைத்து, அவற்றை துகள்களாக மாற்றி, அதில் பாதரசத்தை கலந்து தங்க படிமங்களை தனியாக பிரித்து எடுக்கின்றனர்.

விதிமீறி செயல்படும் அரவை மில்கள்

இதற்காக தேவாலா மற்றும் பந்தலுார் பகுதிகளில், அரவை மில்கள் செயல்பட்டும் வருகிறது. இதுபோல் சட்ட விரோதமாக சுரங்க பாதைகள் அமைத்து உள்ளே செல்லும் பலரும், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற நேரங்களில், 'வனப்பகுதிகளில் விறகு சேகரிக்க சென்ற போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்து விட்டனர்,' எனக்கூறி, உடல்களை அடக்கம் செய்து விடுகின்றனர்.

இதனால், 'பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்ட இந்த பகுதிகளில் யாரும் சென்று தங்க படிமங்கள் சேகரிக்க கூடாது,' என, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

வெடிமருந்து எடுத்து வருபவர்கள் மற்றும் தங்க படிமங்கள் எடுப்பவர்கள் மீது வனத்துறை மற்றும் போலீசார் வழக்கும் பதிவும் செய்கின்றனர்.

கூலிக்கு ஆட்களை அமர்த்தி அத்துமீறல்

எனினும், தற்போது சிலர் சுரங்க குழிகளை சொந்தம் கொண்டாடி, அதில் தங்க படிமங்கள் சேகரிக்க கூலிக்கு வேலை ஆட்களை நியமித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேவாலா பகுதியைச் சேர்ந்த, கணேசன் என்பவர் சுரங்கப்பாதைக்குள் சென்று மூச்சு திணறி உயிரிழந்த நிலையில், போலீசார் மற்றும் வனத்துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து மூவரை கைது செய்தனர்.

வனச்சரகர் சஞ்சீவி கூறுகையில், ''ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய தங்க சுரங்க பகுதிக்கு ஆட்கள் செல்ல அனுமதியில்லை. எனினும், சிலர் அத்துமீறி சென்று சுரங்கம் அமைத்து தங்க படிமங்களை எடுக்கும் போது உயிர் பலிகள் ஏற்படுகிறது.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us