Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; மின் தடை

ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; மின் தடை

ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; மின் தடை

ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; மின் தடை

ADDED : ஜூன் 16, 2025 08:17 PM


Google News
-நிருபர் குழு-

மாவட்டத்தில், கூடலுார், பந்தலுார், ஊட்டி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சேரம்பாடி -சுல்தான் பத்தேரி சாலையில், கப்பாலா என்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சாலையோரம் இருந்த பலா மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்தது. மின் கம்பங்கள் மீது மரம் சாய்ந்ததில் மின் கம்பிகளும் அறுந்து சாலையில் விழுந்தன.மின் தடை ஏற்பட்டது.

இதனால், தமிழக- கேரளா போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், வருவாய் ஆய்வாளர் கவுரி, வி.ஏ.ஓ., ராஜேந்திரன் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இளைஞர்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு


நேற்று மதியம் கொளப்பள்ளியில் இருந்து பாட்டவயல் செல்லும் சாலையில் மரம் அடியோடு பெயர்ந்து விழுந்ததில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மரம் அறுத்து அப்புறப்படுத்தப்பட்ட பின்பு, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தப்பட்டது. குந்தலாடி அருகே சாலையோர மரத்தின் கிளைகள் மின்கம்பியில் முறிந்து விழுந்ததில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து, மின் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிளைகளை வெட்டி அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சேரங்கோடு அருகே சின்கோனா பகுதியில் சாலையோர மின்கம்பம் சாய்ந்து, மின்கம்பிகள் சாலையில் விழுந்தன. அப்போது அந்த வழியாக காரில் சென்ற பாரதிராஜா என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்


இது குறித்து, டான்டீ நிர்வாகம் சார்பில் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின் சப்ளை துண்டித்து, சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

நெலாக்கோட்டை அருகே குழிமூலா பகுதியில் மின்கம்பம் சாய்ந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்ட நிலையில், மின் வாரியத்தினர் பராமரிப்பு பணி மேற்கொண்டு மின் இணைப்பு கொடுத்தனர்.

தொடர்ச்சியாக, பலத்த காற்று மற்றும் மழை பெய்து வரும் நிலையில், பந்தலுார் தாசில்தார் சிராஜூநிஷா, சமூக பாதுகாப்பு திட்டத்தை சேர்ந்த செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் கவுரி தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆற்றில் வெள்ள பெருக்கு


கூடலுாரில் தொடரும் மழையால், பாண்டியார் - புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை டி.ஆர்., பஜார் டெரஸ் சாலையில் மரம் விழுந்தது. நடுவட்டம் பேரூராட்சி ஊழியர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இரவு, 8:00 மணிக்கு ஊட்டி- கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைக்காரா அருகே மரம் விழுந்து, மூன்று மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடுவட்டம் பேரூராட்சி ஊழியர்கள், மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். தேவாலா, பாண்டியார் டான்டீ, தொழிலாளர்கள் குடியிருப்பில் சிவன் என்பவரின் வீட்டு சுவர், இரவில் இடிந்து சேதமடைந்தது.

நேற்று, மதியம் தேவாலா மூச்சிக்குன்னு பழங்குடியினர் கிராமத்தில் மரம் விழுந்து மின் கம்பி சேதமடைந்து மின்சப்ளை பாதிக்கப்பட்டது. தேவர்சோலை, செறுமுள்ளி அஞ்சுகுன்னு சாலையில் மதியம், 3:00 மணிக்கு ஈட்டி மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின் கம்பமும் சேதமடைந்தது. மரத்தை அகற்றி மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஆட்டோவின் மீது விழுந்த மரம்


ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் ஆட்டோவின் மீது மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. தீட்டுக்கல் பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் பாதிக்கப்பட்டதால், அங்கு மின் கம்பிகளை சீரமைத்து பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

குன்னுார் -மஞ்சூர் சாலையில் கோடேரி அருகே வந்து கொண்டிருந்த 'பிக் --அப்' வாகனம் மீது மரம் விழுந்தது. அதில், அறையட்டி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்,34, அதிர்ஷ்டவசமாக காயம் கூட ஏற்படாமல் உயிர் தப்பினார். தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், மஞ்சூர் -குன்னுார் சாலையில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது.

மாவட்டத்தில் மழை பெய்துவரும் பகுதியில், தேசிய, மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர காலங்களில், 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us