ADDED : ஜன 07, 2024 11:30 PM
குன்னுார்;குன்னுார் நான்சச் பகுதியில், கடும் மேகமூட்டம் நிலவும் நிலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த மாதம், 10 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதை , ரன்னிமேடு ரயில்நிலையம், காட்டேரி பார்க் வந்து அங்கு குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தி மலர் செடிகளை சேதம் செய்தது.
இதில் குட்டியுடன் 8 யானைகள் பிரிந்து கிளன்டேல் வழியாக நான்சச் பகுதிக்கு சென்றது.
நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவிய நிலையில் சந்தை கடை வழியாக கடந்து சென்றது. கடும் பனி மூட்டத்தால் காட்டு யானைகள் எதிரே வருவது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.
சாலையோரங்களில் யானைகள் நிற்கும் என்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கவனத்துடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதே போல கொலக்கம்பை பகுதியிலும் 5 யானைகள் முகாமிட்டு இங்குள்ள வாழை, மற்றும் மேரக்காய்களை சேதப்படுத்தியது.