ADDED : செப் 11, 2025 09:40 AM
கூடலுார்; நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில்,30 வளர்ப்பு யானைகள் உள்ளன. அதில், வளர்ப்பு யானை சந்தோஷ். நடப்பு ஆண்டு ஆக., 15ல் நடந்த சுதந்திர விழாவின் போது, இதன், 55 வது பிறந்த நாளை, வனத்துறையினர் கொண்டாடினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் யானையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று, அதிகாலை சந்தோஷ் யானை உயிரிழந்தது.
உயிரிழந்த யானையின் உடலுக்கு, வன துறையினர், தேங்காய் உடைத்து, விளக்கு ஏற்றி, மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, யானை படுத்துவிட்டது. சிகிச்சைக்கு பின் எழுந்து நடந்தது. திடீரென அதிகாலை, 2:00 மணிக்கு தரையில் படுத்த யானை உயிரிழந்தது. இதன் உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது' என்றனர்.