Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ துார் வாராத நீரோடை; வெள்ளம் செல்ல தடை! நீண்ட கால பிரச்னைக்கு கிடைக்குமா விடை?

துார் வாராத நீரோடை; வெள்ளம் செல்ல தடை! நீண்ட கால பிரச்னைக்கு கிடைக்குமா விடை?

துார் வாராத நீரோடை; வெள்ளம் செல்ல தடை! நீண்ட கால பிரச்னைக்கு கிடைக்குமா விடை?

துார் வாராத நீரோடை; வெள்ளம் செல்ல தடை! நீண்ட கால பிரச்னைக்கு கிடைக்குமா விடை?

ADDED : செப் 17, 2025 08:39 PM


Google News
Latest Tamil News
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், 85 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. அதில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை; 25 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

சமீப காலமாக தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால், சிறு விவசாயிகள் மலை காய்கறிகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், கோடையில் தண்ணீர் பற்றாக்குறை, மழை காலங்களில் விவசாய நிலங்கள் மூழ்கி பாதிப்பு ஆகியவை தொடர்கதையாக உள்ளன. இதற்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீரோடைகளில் ஆக்கிரமிப்பு, பராமரிப்பு பணியில் தொய்வு போன்ற காரணங்களால், ஆற்றோரங்களில் வாழும் மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

10 கி.மீ., நீரோடை பாதிப்பு


ஊட்டி அருகே எம்.பாலாடாவில் பல்லாயிரம் ஏக்கர் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு, மேல்கவ்வட்டி முதல் கப்பத்தொரை, எம்.பாலாடா, மணலாடா என, 10 கி.மீ., துாரம் கொண்ட பிரதான நீரோடை உள்ளது.

இதனை பராமரிக்காத காரணத்தால், மழையின் போது வெள்ள பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. அதேபோல், கேத்தி- பாலாடாவிலும் பிரதான நீரோடை ஆக்கிரமிப்பு, காட்டு செடிகளால் சூழ்ந்துள்ளதன் காரணமாக சிறிய மழைக்கு கூட விவசாய நிலங்கள் மூழ்குவது வாடிக்கையாகி விட்டது. இதனால், மழை பெய்தும் கூட பயனில்லாத சூழல் தொடர்கிறது.

குன்னுார்


குன்னுார் ரேலியா அணை, டைகர் ஹில், வெலிங்டன் சுற்றுப்புற மலை பகுதிகளில் உற்பத்தியாகும் நீர், நீரோடைகளாக உருவெடுத்து ஆறுகளாக பவானிக்கு செல்கிறது. இந்த ஆறுகள் துார்வாரப்படாததால், செடிகள், புதர்கள் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையில் வெள்ளம் பெருக்கெடுப்பதால், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது.

கடந்த, 2019ல், ஹன்கூன்தொரை ஆறு (டி.டி.கே., சாலை ஆறு), வி.பி., தெரு ஆறு தன்னார்வ அமைப்பு நிதியுதவியுடன், 'கிளீன் குன்னுார்' அமைப்பு சார்பில், துார் வாரப்பட்டு பணிகள் நடந்து கம்பி வேலி அமைக்கப்பட்டது. அங்கு தற்போது, குப்பைகள், துணி மூட்டைகள், இறைச்சி கழிவுகள் கொட்டுவது கழிவுநீர் கலப்பது ஆகியவற்றால் நீர் மாசுபட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நகராட்சியின் கழிப்பிட கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலக்க விடப்படுகிறது.

கூடலுார்


கூடலுார் பகுதியில், ஏராளமான நீரோடைகள், ஆறுகள் உற்பத்தியாகின்றன. இவை அனைத்தும் கேரளா சாளியார் ஆறு மற்றும் பவானி ஆற்றின் கிளை ஆறான மாயார் ஆற்றில் சங்கமிக்கிறது. இந்த ஆற்றுநீர், கூடலுார், முதுமலை பொதுமக்களுக்கும், வன விலங்குகளுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில், பலப்பகுதிகளில் நீரோடைகள், வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர், கழிப்பிட கழிவுகளை வெளியேற்றவும், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் இடமாக மாறி உள்ளன. இதனால், குடிநீர் மாசுபட்டு யாரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கோழிக்கோடு


பள்ளிப்படி பகுதியில், நீரோடையின் வழித்தடத்தை மாற்றி இருப்பதுடன், நீரோடை செல்வதற்காக, சிமென்ட் குழாய்கள் அமைத்து அதன் மீது மண் நிரப்பி தங்கள் தேவைக்கு பலர் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை முழுமையாக சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைப்பதன் வாயிலாக நீர்நிலைகளை பாதுகாக்க முடியும்.

பந்தலுார்


பந்தலாரில் கபினியின் கிளை நதியான பொன்னானி ஆறு; சாலியாற்றில் கலக்கும் சோலாடி மற்றும் கோட்டூர் ஆறு ஆகியவை உற்பத்தி ஆகிறது. மழை காலங்களில் தண்ணீர் வழிந்தோட ஏதுவாக, இந்த ஆறுகளில் சில பகுதிகள் மட்டும் துார் வாரப்பட்டது. பல நீரோடைகள் துார் வாராமல் விடப்பட்டுள்ளதால், பெருக்கெடுக்கும் தண்ணீர் வழிந்தோட வழி இல்லாமல், சாலைகள் மற்றும் குடியிருப்புகள், தோட்டங்களில் நிறைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலை மாற கால்வாய்கள், நீரோடைகள் மற்றும் ஆறுகளை கோடை காலங்களில் தூர்வாரி சுத்தப்படுத்தவும், இந்த பணியில் உள்ளூர் தன்னார்வலர்களை ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

கோத்தகிரி


கோத்தகிரி தாலுகா பகுதி விவசாயத்தை நம்பியுள்ளது. மழை குறையும் பட்சத்தில், வறட்சி நாட்களில் ஓடை தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில், பாண்டியன் பார்க், பனஹட்டி, குரு வேனு வெள்ளா நீர் பிடிப்பு பகுதி, குடிமனை நீரோடை, ஈளாடா நீரோடை மற்றும் கூக்கல்தொரை நீரோடை என, 10க்கும் மேற்பட்ட நீரோடைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கடந்த பல ஆண்டுகளாக, இந்த நீரோடைகள் துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், செடிகள் மற்றும் புற்கள் ஆக்கிரமித்து, ஓடையின் ஆழமும் அகலமும் சுருங்கி உள்ளது. இதனால், மழை நாட்களில் தண்ணீரை முமுவதுமான சேமிக்க முடியாத நிலையில், வறட்சி நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால், விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர், ஓடைகளை முழுமையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் பொறியியல் துறை அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், '' வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாய நடைமுறைகளை மேம்படுத்துதல்; நீர்ப்பாசன மற்றும் வடிகால் அமைப்புகளை திட்டமிட்டு வடிவமைத்தல்; விவசாய இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தல்; விவசாய இயந்திரங்களை மேம்படுத்துதல்; மண் மற்றும் நீர்ப்பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குதல் உட்பட பல பணிகள் நடக்கிறது.

மேலும், இந்த துறை இயந்திர பொறியியல், குடிசார் பொறியியல், மின்பொறியியல் மற்றும் வேதியியல் பொறியியல் அறிவை விவசாய தொழில்நுட்பத்துடன் இணைத்து விவசாயத்தின் திறனை அதிகரிக்கும் பணிகளை செய்து வருகிறது.

நீலகிரியை பொறுத்தவரை வேளாண் பொறியியல் துறை சார்பில் நில அளவை செய்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோடையை துார்வாரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. விவசாய நிலங்களை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 60 லட்சம் ரூபாயில் நீரோடைகள் துார்வாரப்பட்டுள்ளது. தற்போது கூட கேத்தி உட்பட சில பகுதிகளில் துார் வரும் பணி நடக்கிறது. தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். துார் வார நீரோடை, ஆறுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு அனுப்பி, நிதி பெற்று கோடையில் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

20 ஆண்டுகாளாக பராமரிப்பு இல்லை


அருவங்காடு பகுதியை சேர்ந்த சூழல் ஆர்வலர் சஜீவன் கூறுகையில், '' குன்னுார் வெலிங்டன் கிடங்கு பகுதியில், 20 ஆண்டுகளாக ஆறு துார்வாரப்படாமல் உள்ளது. இதே போல, குன்னுாரில் உள்ள நீரோடைகள் குப்பை, மண் கொட்டும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பதால், வனவிலங்குகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. நீரோடைகளையும், நீராதாரங்களையும் பாதுகாக்கும் வகையில் தொலை நோக்கு திட்டங்களை வகுக்க வேண்டும்,'' என்றார்.



நீர் நீலைகளை துாய்மை படுத்தணும்


கூடலுார் கால்நடை பராமரிப்பு துறை (ஓய்வு) மேலாளர் ராமையா,'' கூடலுாரில் ஏராளமான நீர்நிலைகள் உற்பத்தி ஆகிறது. இவை, மக்களுக்கு பெரிய அளவில் பயன்படுவதில்லை. இங்கு, உற்பத்தியாகும் நீரோடைகள் மாசடைந்து உள்ளதால், அதனை குடிநீராக பயன்படுத்தும் வனவிலங்கு மற்றும் பொது மக்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாசுபட்டுள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்து துாய்மை படுத்த வேண்டும். மண் வளத்தை பாதுகாக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை தேவை,'' என்றார்.



தன்னார்வலர்கள் கை கொடுக்க வேண்டும்


பந்தலுார் 'டியூஸ் மெட்ரிக்' பள்ளி முதல்வர் சுசீந்திரநாத் கூறுகையில்,''இரண்டாவது சிரபுஞ்சி என்ற பெயர் பெற்ற தேவாலா மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில், மழையின் தீவிரம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப கோடை காலங்களில் நீரோடைகள், கால்வாய்கள் மற்றும் ஆறுகளை துார்வாரி சீரமைத்தால் மட்டுமே, மழை காலங்களில் மழை நீர் வழிந்தோடி, இயற்கை பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். இதுபோன்ற சீரமைப்பு பணிகளை அரசு நிர்வாகங்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை மாற வேண்டும். தன்னார்வலர்களும் தங்கள் குடியிருப்புகளை ஒட்டி உள்ள கால்வாய்கள் மற்றும் நீரோடைகளை சீரமைத்தால் பயனாக இருக்கும். விவசாயிகளும் பயன்பெறுவர்,'' என்றார்.



கடன் பெற்றும் பயனில்லை


கோத்தகிரி சமூக ஆர்வலர் குமரன் கூறுகையில், ''கோத்தகிரி பகுதியில், தேயிலை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், கூடுமானவரை மலை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தோட்ட பயிர்களுக்கு தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. போதிய தண்ணீர் வசதி இல்லாத பட்சத்தில், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. நீரோடைகளை நம்பி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, ஓடைகளை துார்வாரப்படாமல் இருப்பதால், வறட்சி நாட்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இதனால், தோட்டங்களுக்கு செலவிட்ட முதலீடு கூட கிடைக்காமல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம், துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, அனைத்து ஓடைகளையும் தூர்வார துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.



வீணாகி வரும் மழை வெள்ளம்


நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஓடைகள் துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சி நாட்களில், பயிர்களுக்கு சரிவர தண்ணீர் பாய்ச்ச முடியாமல், பயிர்கள் செழித்து வளராமல் சாகுபடி குறைந்து வருகிறது. ஏற்கனவே இடுபொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், ஓடைகள் தூர்வாராததால், தண்ணீருக்காக கிணறுகள் வெட்டவே, அதிக தொகையை விவசாயிகள் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. விவசாயிகள் நலன் கருதி, சம்பந்தப்பட்ட நிர்வாகம், ஓடைகளை முழுமையாக தூர்வார முன்வர வேண்டும்,'' என்றார்.



மக்களுக்கு விழிப்புணர்வு தேவை


வக்கீல் எஸ்.கே. செல்வராஜ் கூறுகையில், ''பல விவசாயிகள், நீரோடையை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததால், கன மழையின் போது பெருத்த சேதம் நேரிடுகிறது. தவறான விவசாய முறைகளால் அதீத மழை, காற்று, பருவ மழை காலங்களில் மதிப்புமிக்க மேல் மண் இழப்பு ஏற்படுகிறது. இந்த மண் நீர்நிலைகளில் படிந்து அவற்றின் கொள்ளளவை குறைத்து விடுவதுடன் மண் மதிப்பற்றதாகி விடுகிறது.இனி வரும் காலங்களில் பேரிடர் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேளாண் பொறியியல் துறை, விவசாய நிலம் கட்டமைப்பு குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்



-நிருபர் குழு-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us