Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/10 ஆண்டுகளில் விலங்குகள் தாக்கி 134 பேர் பலி; வழி தடங்களில் உள்ள மின் வேலிகளை அகற்ற ஆய்வு

10 ஆண்டுகளில் விலங்குகள் தாக்கி 134 பேர் பலி; வழி தடங்களில் உள்ள மின் வேலிகளை அகற்ற ஆய்வு

10 ஆண்டுகளில் விலங்குகள் தாக்கி 134 பேர் பலி; வழி தடங்களில் உள்ள மின் வேலிகளை அகற்ற ஆய்வு

10 ஆண்டுகளில் விலங்குகள் தாக்கி 134 பேர் பலி; வழி தடங்களில் உள்ள மின் வேலிகளை அகற்ற ஆய்வு

ADDED : ஜூன் 13, 2025 09:23 PM


Google News
Latest Tamil News
கூடலுார் வனக்கோட்டத்தில், கூடலுார், ஓவேலி, ஜீன்பூல், தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு ஆகிய, 6- வனச்சரகங்கள் அமைந்துள்ளன.

இந்த பகுதிகள், தமிழக வனப்பகுதியாக மட்டும் இன்றி; கேரளா மாநிலம் நிலம்பூர் மற்றும் முத்தங்கா; கர்நாடக மாநிலம் பந்திப்பூர், முதுமலை புலிகள் காப்பகம் ஆகிய பகுதிகளின் எல்லை பகுதிகளாக உள்ளன.

மேலும், வனப்பகுதிகளை ஒட்டி, கிராமப் புறங்கள் மற்றும் தேயிலை தோட்டங்கள் அதனை சார்ந்த குடியிருப்புகள், சங்கிலி தொடராக அமைந்துள்ளதால், வன விலங்குகளின் நடமாட்டம் இருப்பது வழக்கம்.

கடந்த காலங்களில் விலங்குகளால் அடிக்கடி பாதிப்பு இல்லாத நிலையில், விவசாய தோட்டங்களில் சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டதால் பல்வேறு பிரச்னைகள் தொடங்கின.

குறிப்பாக, நிலம்பூர் வனத்தை ஒட்டிய கிளன்ராக் மற்றும் முத்தங்கா; முதுமலை வனத்தை ஒட்டிய பாட்டவயல், பிதர்காடு; கேரளா வனத்தை ஒட்டிய ஓவேலி பகுதிகளிலும் அதிக அளவிலான தோட்டங்களில் சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தடைபட்ட யானை வழித்தடம்


இதனால், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்லும் வழித்தடங்கள் தடைபட்டதால், புதிய வழித்தடங்களை வனவிலங்குகள் உருவாக்கி, மக்கள் நடந்து செல்லும் சாலை மற்றும் பாதைகளில் வன விலங்கு களும் வந்து செல்ல துவங்கின. இதனால், மனித- மோதல் சம்பவங்கள் அதிகரித்து, பலர் பலியாகினர்.

கடந்த, 10 ஆண்டுகளில் கூடலுார் வனக்கோட்டத்தில் வன விலங்குகள் தாக்கி, 134 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

நீராதாரங்கள் அழிவால் சிக்கல்


அத்துடன் பிதர்காடு பகுதியில், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் மற்றும் விவசாய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வன விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் நீராதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவை வசதி படைத்தவர்களின் தோட்டங்களாகவும், சொகுசு விடுதிகளாக மாற்றப்பட்டு வருகிறது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கையகப்படுத்தப்பட்ட அரசு நிலங்கள் தற்போது, வீட்டுமனைகளாக மாறி வருகிறது.

உள்ளூர் மக்கள் கூறுகையில், 'இப்பகுதிகளில் உள்ள யானை வழித்தடங்களை மீட்கவும், ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை ஆய்வு செய்து, பாரபட்சமின்றி கையகப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனியார் தோட்டங்களில் உள்ள மின் வேலிகளை அகற்றினால் யானைகள் கிராமங் களுக்குள் வருவது குறையும்,' என்றனர்.

விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கை

கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்லும் பகுதிகள் மற்றும் அரசு நிலங்களை கையகப்படுத்தி தோட்டங்களாக மாற்றி உள்ள பகுதிகளில் ஆய்வு செய்யப்படும். இப்பகுதிகளில், சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்கள் குறித்தும் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள்; மின் வேலிகளை அகற்றி, வன விலங்கு- மனித மோதல்களை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us