/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு யானைகள்
குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு யானைகள்
குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு யானைகள்
குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு யானைகள்
ADDED : ஜூன் 20, 2024 05:13 AM

மேட்டுப்பாளையம் : மோதூர் குடியிருப்பு பகுதிக்கு யானைகள் வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே ஊரின் ஓரத்தில் உள்ள முள் மரங்களை வெட்ட, தனியார் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமுகையில் 'விஸ்கோஸ்' ஆலை இயங்கிய போது, அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரில், விவசாயம் செய்ய, இரும்பொறை சிட்டேபாளையம், மோதூர் ஆகிய பகுதிகளில், 720 ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டன.
இதில் கழிவுநீரில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால், விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டது. பல ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் இருந்ததால், முள் மரங்கள் வளர்ந்து, அடர்ந்த வனப்பகுதியாக மாறியது. வனப்பகுதி அருகே இந்த நிலங்கள் உள்ளதால், வனப்பகுதியில் இருந்து யானைகள், காட்டு மாடுகள், மான்கள், சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் முள் மரக்காடுகளில் வசித்து வருகின்றன.
இந்நிலையில் கழிவுநீர் பாசன நிலங்களை கோர்ட் வாயிலாக (அபீஸியல் லிக்குடேட்டர்) ஏலம் விட்டதில், தனியார் ஏலம் எடுத்துள்ளனர். இவர்கள் கழிவுநீர் பாசன நிலங்களில் வளர்ந்துள்ள முள் மரங்களை, அவ்வப்போது வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். மோதூர், சிட்டேபாளையம் ஆகிய பகுதிகளின் அருகே முள் மர காடுகள் இருப்பதால், அதில் உள்ள யானைகள், குடியிருப்பு பகுதிக்கு அடிக்கடி வந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இது குறித்து மோதூர் கிராம மக்கள் கூறியதாவது: இந்த காடுகள் அருகே மோதூர், சிட்டேபாளையம் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இதில் மோதூரில், 200க்கும் மேற்பட்ட வீடுகளும், சிட்டேபாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. முள் காட்டில் இருக்கும் யானைகள் இரவில் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
கடந்த ஒரு வாரமாக இரண்டு யானைகள், இரவில் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து வீடுகளின் வெளியே தொட்டிகளில் உள்ள தண்ணீரை குடித்தும், மரத்தின் இலைகளை சாப்பிட்டும் செல்கின்றன. வெயில் காலம் என்பதால், பெரும்பாலானவர்கள் வீதிகளில் திறந்த வெளிகளில், படுத்து தூங்குகின்றனர்.
குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகளால், எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. யானைகளை விரட்ட வனத்துறையினர் அழைத்தால், அவர்கள் வருவதற்குள் யானைகள் எங்களை விரட்டுகின்றன.
அதனால் எங்கள் குடியிருப்பு பகுதியின் ஓரத்தில் உள்ள முள் மரங்களை, ஏலம் எடுத்த தனியார் அமைப்பினர் வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து நடைபெற உள்ள ஜமாபந்தியில், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.