/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் கனமழை ;சாலையில் நீர் தேக்கம் ஊட்டியில் கனமழை ;சாலையில் நீர் தேக்கம்
ஊட்டியில் கனமழை ;சாலையில் நீர் தேக்கம்
ஊட்டியில் கனமழை ;சாலையில் நீர் தேக்கம்
ஊட்டியில் கனமழை ;சாலையில் நீர் தேக்கம்
ADDED : ஜூன் 07, 2024 12:09 AM
ஊட்டி:ஊட்டியில் பெய்த கன மழைக்கு குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வார்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்.
நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
ஊட்டியில் நேற்று காலை, 11:00 மணிக்கு துவங்கிய கனமழை ஒரு மணி நேரம் பெய்தது. ஊட்டி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ், தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
நீரில் சிக்கிய ஒரு சில வாகனங்கள் அங்கிருந்தவர்கள் உதவியுடன் வெளியில் எடுக்கப்பட்டன. ரயில் நிலையம் செல்லும் சாலையில் கடைகள் முன்பு தண்ணீர் தேங்கியது. ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் போலீஸ் ஸ்டேஷனில் துர்நாற்றம் வீசியது.
இதேபோல், ஊட்டி காந்தள், 25வது வார்டுக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. புதுநகர் மற்றும் பென்னட் நகர் பகுதியில் தண்ணீர் இங்கு வருகிறது. 'பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என, குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தினர். மதியம், 2:00 மணியிலிருந்து மீண்டும் மழை பெய்தது.
ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை, 18 டிகிரியாக நிலவியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு, 80 சதவீதமாக இருந்தது.
தாசில்தார் சரவணன் கூறுகையில்,''ஊட்டியில் பெய்த கன மழைக்கு காந்தள் பகுதியில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நகராட்சி ஊழியர்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. மழை பாதிப்பு இருந்தால் நிவாரண முகாமில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
பந்தலுாரில் நேற்று மதியம் கனமழை பெய்தது. அதில், கடைகள் மற்றும் ஒரு சில குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.
பஜார் பகுதியில் மழைநீர் வழிந்தோட கால்வாய் கால்வாய் முறையாக சீரமைக்கப்படாத நிலையில், தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வாகனங்களை இயக்கியதுடன், பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டனர்.