Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாநகராட்சியாக தரம் உயர்வு: கைவிடாவிட்டால் வழக்கு பல்வேறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சியாக தரம் உயர்வு: கைவிடாவிட்டால் வழக்கு பல்வேறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சியாக தரம் உயர்வு: கைவிடாவிட்டால் வழக்கு பல்வேறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சியாக தரம் உயர்வு: கைவிடாவிட்டால் வழக்கு பல்வேறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 15, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
ஊட்டி:ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நஞ்சநாடு சுற்றுப்புற கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊட்டியில், 36 வார்டுகள் உள்ளன. 1987 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வரும், இதன் மொத்த பரப்பளவு, 30 சதுர கி.மீ., ஆகும். தற்போது, ஊட்டி நகராட்சியின் மக்கள் தொகை, 1.30 லட்சம்.

இந்நிலையில், ஊட்டி நகராட்சியை எல்லையை விரிவாக்கம் செய்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், அதிக அளவில் அரசு திட்டங்கள், நிதி செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால், ஊட்டி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம மக்கள் எதிர்ப்பு


இதன்படி, ஊட்டி நகராட்சியுடன், கேத்தி பேரூராட்சி, இத்தலார், உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு அனைத்து பஞ்சாயத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் இத்தலார் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 32 கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நஞ்சநாட்டில் போராட்டம்


இந்நிலையில், நஞ்சநாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட நஞ்சநாடு, குருத்துக்குளி, மேல்கவ்வட்டி, கீழ்கவ்வட்டி, மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட கண்டன கூட்டம், ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

அதில், ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவதையும், அதில் நஞ்சநாடு சுற்றுப்புற கிராமங்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகல் முதல்வர் தனிப்பிரிவு, உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நஞ்சநாடு நலக்குழு தலைவர் மணி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் துரை முன்னிலை வகித்தார். நாகப்பெட்டா மற்றும் தொதநாடு படுகர் நல சங்க தலைவர் பாபு தலைமை வகித்தார்.

நஞ்சநாடு பஞ்சாயத்து தலைவர் சசிகலா பிரச்னைகள் குறித்து பேசினார். தொதநாடு படுகர் நல சங்க நிர்வாகிகள் கணேஷ் ராமலிங்கம், குண்டன், பெள்ளி, ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

வழக்கு தொடர முடிவு

போராட்டக் குழுவினர் கூறியதாவது: ஊட்டி நகராட்சியை, மாநகராட்சியாக மாற்றி நஞ்சநாடு கிராமத்தை அதில் இணைப்பது குறித்து கிராம மக்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. ஊட்டியை மாநகராட்சியாக மாற்றினால் அதன் தனித்தன்மையை இழந்து விடும். பாரம்பரிய கிராமங்களில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் கிராம மக்களின் கலாசாரங்கள் அழிந்து விடும். நிலம், தண்ணீர் உட்பட பல்வேறு மறைமுக வரிகள் விதிக்கப்படும். 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் போய்விடும். ஊட்டி கான்கிரீட் காடாக மாறிவிடும். ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் நடவடிக்கையை கைவிடாவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us