/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மானியத்தில் கோழிக்குஞ்சுகள் :விவசாயிகளுக்கு அழைப்பு மானியத்தில் கோழிக்குஞ்சுகள் :விவசாயிகளுக்கு அழைப்பு
மானியத்தில் கோழிக்குஞ்சுகள் :விவசாயிகளுக்கு அழைப்பு
மானியத்தில் கோழிக்குஞ்சுகள் :விவசாயிகளுக்கு அழைப்பு
மானியத்தில் கோழிக்குஞ்சுகள் :விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 10, 2024 12:37 AM
ஊட்டி;நீலகிரி மாவட்ட கிராமப்புற விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை மூலம், மானிய திட்டத்தில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகின்றன.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விவசாயிகளுக்கு, மானிய திட்டத்தில், கோழி கொட்டகை கட்டுமானம், நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான, மொத்த செலவில், 50 சதவீதம் மானியமாக, ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 875 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பயனாளிக்கும், நான்கு வார வயதுடைய, 250 நாட்டு கோழிக்குஞ்சுகள், ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணை மூலம் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஆர்வம் உள்ள மூன்று முதல் ஆறு தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வரும், 15ம் தேதிக்குள் கலெக்டரின் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் பட்டியல் சமர்ப்பிக்க உள்ளதால், 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
இதில், விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில், 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும்.
திட்டத்தில் மீதம் உள்ள, 50 சதவீதம் பயனாளி பங்களிப்பை, வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும்.
கிராமத்தில் நிரந்தரமாக வசிக்கும் பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தப்பட்சம், 625 சதுர அடி நிலம், குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் பயனாளிகள் உரிய ஆதார ஆவணங்கள், மூன்று ஆண்டிற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, இத்திட்டத்தில், ஏற்கனவே பயனடையவில்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை அளிக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில், 100 பயனாளிகள் இறுதிச் செய்யப்படுவர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஆவணங்களுடன் இணைத்து, அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் அளிக்கலாம். இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.