Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காற்றுடன் மழை...! மாவட்டத்தில் 10 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு அணைகளில் நீர் மட்டம் உயர்வால் மின்வாரியம் நிம்மதி

காற்றுடன் மழை...! மாவட்டத்தில் 10 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு அணைகளில் நீர் மட்டம் உயர்வால் மின்வாரியம் நிம்மதி

காற்றுடன் மழை...! மாவட்டத்தில் 10 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு அணைகளில் நீர் மட்டம் உயர்வால் மின்வாரியம் நிம்மதி

காற்றுடன் மழை...! மாவட்டத்தில் 10 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு அணைகளில் நீர் மட்டம் உயர்வால் மின்வாரியம் நிம்மதி

ADDED : ஜூலை 16, 2024 11:06 PM


Google News
ஊட்டி;நீலகிரியில் காற்றுடன் பெய்த மழைக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது; அணைகளில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் மின்வாரிய அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், தென் மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி, கடந்த சில நாட்களாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

நீலகிரிக்கு 'ரெட்' அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும், 456 நிவாரண முகாம்கள் உள்ளன. மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் படி, அந்தந்த தாலுகாவில் வருவாய் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிவாரண முகாம்களை தயார்படுத்தியுள்ளனர். 283 பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக அருகில் உள்ள முகாம்களில் தங்க வேண்டும். என, அறிவுறுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு


நேற்று முன்தினம் இரவு முதல் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. பலத்த காற்றுக்கு மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலையில், 2 இடங்களில் மரங்கள் விழுந்தது. கோரகுந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி, மஞ்சூர் - ஊட்டி சாலையில் காந்திபேட்டை, தமிழக சாலை, மரவியல் பூங்கா, பிரீக்ஸ் சாலை, பர்ன்ஹில் உள்ளிட்ட, 10 இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுக்காவில், 8 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் ஹரி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஊட்டி, கூடலுாரில் தீயணைப்பு துறை நிலை அலுவலர்கள் தலைமையில், 50க்கு மேற்பட்ட தீயணைப்பு துறை ஊழியர்கள் மரம் விழுந்த பகுதிகளுக்கு சென்றனர்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில், இரு துறைகள் இணைந்து மரங்கள் விழுந்த பகுதிகளுக்கு சென்று 'பவர்ஷா' உதவியுடன் மரங்களை அறுத்து பொக்லைன் உதவியுடன் அகற்றிய பின், போக்குவரத்து சீரானது.

ஊட்டி, கூடலுார், பந்தலுாரில் ஆங்காங்கே சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. 3 வீடுகளில் பக்க பாட்டு சுவர் சேதமானது. சில பகுதிகளில் மின் கம்பங்கள் மீது ராட்சத மரங்கள் விழுந்ததால் பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் உடனுக்குடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆபத்தான மரங்கள்


பொதுமக்கள் கூறுகையில், 'மாவட்ட முழுவதும் பெரும்பாலான பகுதியில் சாலையோர நுாறாண்டு பழமை வாய்ந்த மரங்கள் வலுவிழந்து காணப்படுகிறது. சூறாவளி காற்றுடன் பெய்யும் பலத்த மழைக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பலத்த காற்றை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலை, வனத்துறை இணைந்து அபாய மரங்களை கணக்கிட்டு அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல், அபாயகர மரங்கள் அகற்ற கோரி பொதுமக்களிடமிருந்து வரும் மனுக்களை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

அதிகாரிகள் நிம்மதி...

குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையம், 13 அணைகள், 30 தடுப்பணைகள் உள்ளன. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம், தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதிர் பார்த்த அளவு மழை பெய்யவில்லை. மின் உற்பத்தி, குடிநீர் தேவைக்கு படிப்படியாக தண்ணீர் எடுக்கப்பட்டதால் தண்ணீர் இருப்பு அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. தற்போது, பெய்து வரும் மழையில், 12 அடி வரை நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் மின்வாரிய அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். சில நாட்கள் மழை தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.



மழை அளவு

மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா பகுதிகளில் வழக்கத்தை விட அதிகபட்சம் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, முக்குறுத்தி, 18 க்கு 14 அடி; பைக்காரா, 100 க்கு 60; சாண்டிநல்லா 40 க்கு 33; கிளன்மார்கன் 33 க்கு 22; மாயார் 17 க்கு 15; அப்பர்பவானி 210 க்கு 130; பார்சன்ஸ் வேலி 77 க்கு 45; போர்த்தி மந்து 130 க்கு 90; அவலாஞ்சி 171க்கு 90; எமரால்டு 184 க்கு 95; குந்தா 89க்கு 87; கெத்தை 156 க்கு 148; பில்லுார் 100 க்கு 90 அடிவரை அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us