/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நிதி இல்லாததால் ஊராட்சி நிர்வாகங்கள் முடங்கின நிதி இல்லாததால் ஊராட்சி நிர்வாகங்கள் முடங்கின
நிதி இல்லாததால் ஊராட்சி நிர்வாகங்கள் முடங்கின
நிதி இல்லாததால் ஊராட்சி நிர்வாகங்கள் முடங்கின
நிதி இல்லாததால் ஊராட்சி நிர்வாகங்கள் முடங்கின
ADDED : ஜூன் 20, 2024 05:06 AM
அன்னுார் : தமிழக அரசு 40 நாட்களாக ஊராட்சிகளுக்கு நிதி விடுவிக்காததால் அத்யாவசிய பணிகள் செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் முடங்கியுள்ளன.
தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து கிராம ஊராட்சிகளையும் புதிய வங்கி கணக்கு துவக்க அறிவுறுத்தியது. இந்தக் கணக்கு டி.என்.பாஸ் என்று அழைக்கப்படுகிறது.
ஊராட்சியில் வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, உரிமக் கட்டணம், உள்ளிட்ட அனைத்து வரி இனங்களையும் இந்த வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.
ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பெயரிலான இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் தொகை பின்னர் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த மே மாதம் 10ம் தேதிக்கு பிறகு கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் அன்னுார் ஒன்றிய தலைவர் சித்ரா, செயலாளர் நடராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை :
ஊராட்சிகள் தாங்கள் வசூலித்த சொத்து வரி, குடிநீர் கட்டணம், உரிமக் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை, குடிநீர் குழாய் பராமரிப்பு, கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு பயன்படுத்தி வந்தன. தற்போது அடிக்கடி இந்த வங்கிக் கணக்கை ஊரக வளர்ச்சித் துறை முடக்கி விடுகிறது. தற்போது முடக்கப்பட்டு 40 நாட்கள் ஆகிவிட்டது.
ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. குழாய் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் பராமரிப்பு பணி செய்ய முடியவில்லை. ஊராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அரசு உடனடியாக முன் இருந்ததைப் போல், ஊராட்சிகள் வசூலிக்கும் தங்கள் சொந்த நிதியை குடிநீர் பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் கிராம ஊராட்சியில் அத்தியாவசிய பணிகள் செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.